Politics

“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!

தமிழ்நாட்டில் த.வெ.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், “தங்களை யாருமே விமர்சிக்கக் கூடாது. நாங்கள் தவறே செய்தாலும் தட்டிக்கேட்கக் கூடாது” என்ற மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.

அதற்கு கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் கைது நடவடிக்கைகளும், தொடர்பில்லாத குற்ற வழக்குப்பதிவுகளும் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

எதிர்க்கட்சியின் தலையாயப் பணியே, அரசின் நிர்வாகத் தோல்வியையும், தவறுகளையும் சுட்டிக்காட்டுவதுதான். இதுவே, ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பு என்பதைக் கூட அறியாத ஒரு கூட்டம் ஆட்சியைப் பிடித்ததும் இதற்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அவ்வரிசையில், த.வெ.க ஆட்சியின் கைது நடவடிக்கைகளை கண்டித்து தி இந்து ஆங்கில நாளிதழும் கண்டனக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் தங்களது பெயர்களை காத்துக்கொள்ள காவல்துறையை ஏவிவிடுவது, குற்ற வழக்குகள் பதிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கும் போக்காகும்.

ஆனால், அதுபோன்ற ஜனநாயக சிதைவு நடவடிக்கைகளைதான் ஆளும் த.வெ.க அரசு மேற்கொண்டு வருகிறது.

த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சுமார் 10 பேர், முதலமைச்சரை அல்லது த.வெ.க அமைச்சர்களை விமர்சித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் சமூக ஊடகவியலாளர்கள் கைது தொடங்கி, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு - கைது, சட்டமன்ற உறுப்பினர்கள் கைது என த.வெ.க ஆட்சியின் அட்டூழியம், அடுக்கடுக்காய் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆளுங்கட்சியினரை விமர்சிப்பவர்களை கைது செய்யத் துணியும் காவல்துறை, ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மீதும் உள்ள புகார்களை புறக்கணித்து வருகிறது. இது த.வெ.க.வின் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.

சரியான விமர்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுதான் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை அரசு செயல்படுத்திட முடியும். இதனை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.”

Also Read: பரந்தூர் விமான நிலையம் : மாற்று இடம் கேட்காத தமிழ்நாடு அரசு - தி.மு.க MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!