Politics

“அச்சுறுத்தல், கைதுகளுக்கு திமுக-வினர் அஞ்ச மாட்டார்கள்.. அனைத்திற்கும் தயார்” - கனிமொழி எம்.பி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டு நேற்று (ஜூலை 20) அராஜகமாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், 13 மணி நேர விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை திமுக துணைப் பொது செயலாளர், கனிமொழி எம்.பி இன்று (ஜூலை 21) பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்தும் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறையில் நல்ல உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திமுக-வினருக்குப் புதிய இடம் அல்ல.

கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தலைவர் கலைஞர் அவர்கள் சிறைவைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இதுவாகும். எனவே, திமுக-வைச் சேர்ந்தவர்கள் சிறை செல்வதைப் பெருமையாகவே கருதுகிறார்கள். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், பொய் வழக்குகளுக்கும், கைதுகளுக்கும் திமுக-வில் யாரும் அஞ்சமாட்டார்கள். எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டாலும் அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள திமுக-வும் அதன் தலைமையும் தயாராகவே இருக்கிறோம்.

இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இன்று காலையில்கூட ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் தினசரி குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பல்வேறு புகார்கள் இருந்தும், அவரிடம் விசாரணை நடத்தக்கூட இந்த அரசு தயாராக இல்லை. ஆனால், தவறாகப் பேசினார் என்ற காரணத்திற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ அவர்களுக்கும் இது போன்ற அச்சுறுத்தல்களும் வழக்குகளும் அளிக்கப்பட்டன. இது தவிர, சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்கள், யூடியூபர்கள் போன்றோரையும் இந்த அரசு சிறைக்கு அனுப்பி வருகிறது. காவல் துறையை மாற்று கருத்துடையவர்களையும் எதிர்க்கட்சியினரையும் ஒடுக்குவதற்காக மட்டுமே இந்த அரசு பயன்படுத்தி வருகிறது.

எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலேயே அவரை எவ்வளவோ விமர்சித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் திமுக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், தற்போது அதிகாரம் செய்பவர்களிடம் ஜனநாயகப் பண்புகளோ, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமோ இல்லை. அவர்கள் பயத்தின் காரணமாகவே அரசியல் செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக என்ற பெயரை நேரடியாக உச்சரிப்பதற்குக் கூட அச்சப்பட்டுக்கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. அவர்களுக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கிப் போராடியதற்காகப் பாடகர் அறிவு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் மாணவர்களின் போராட்டங்கள் எவ்வாறு வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறதோ, அதே பாணியைத்தான் இங்கும் கையாளுகிறார்கள்.

மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் குறித்து பேசுகையில், டெல்லியில் போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றார்.

Also Read: “திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!