Politics
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
முதல்வர் விஜய் குறித்து விமர்சித்தார் என, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனைக் இன்று (ஜூலை 20) கைது செய்து தவெக அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுகவினர் எமர்ஜென்சியையே பார்த்தவர்கள். தவெக அரசால் எத்தனை பேரை சிறையில் வைக்க முடியும்.?
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. அதைத்தடுக்க காவல்துறைக்கு நேரமில்லை. திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழிச்சிடலாம்னு நினைச்சா அவனை விட உலக மகா மடையன் யாரும் இருக்க முடியாது
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள் முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்துள்ளனர். இது போன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் கண்டு பயப்படுகின்ற கட்சி அல்ல திமுக. எமர்ஜென்சியை பார்த்தவர்கள். சிறைச்சாலைக்கு பலமுறை சென்று வந்தவர்கள். நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறையிலே இருந்த கட்சிதான் திமுக. சட்ட நகலை எரித்ததற்காக மதுரையில இரண்டு வருடம் தண்டனை பெற்றிருந்த கழக தோழர்கள் எல்லாம் உண்டு.
கோவை ராமநாதன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவருக்கு திருமணமாகி இரண்டு மூன்று மாதம் தான் ஆகி இருந்தது. அவரை நான்கு வருடம் தண்டனை கொடுத்து சிறையில் வைத்தனர். அதை எல்லாம் சந்தித்த கட்சி திமுக இதை எல்லாம் தெரியாம புதுசா ஆட்சிக்கு வந்திருக்கறவங்களுக்கு பக்கத்துல இருக்கறவங்க யாராவது வரலாற சொல்லணும். அதாவது ஒருத்தர் விமர்சிக்கிறார் என்று சொன்னால் ஜனநாயகத்தில் அந்த உரிமை இருக்கிறது.
எம்ஜிஆர் அவர்கள் கட்சி துவங்கிய நேரத்தில் அந்த கட்சியினுடைய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் கே.ஏ.கிருஷ்ணசாமி அப்பொழுது அவர் மேடையில் எம்ஜிஆர் அவர்களை வைத்துக்கொண்டே பேசினார், புரட்சி தலைவர் ஆணையிட்டால் கருணாநிதியுடைய தலையை கொய்து வருவேன் என்று கேஏ.கிருஷ்ணசாமி பேசினார். ஆனால் அவர் மீது தலைவர் கலைஞரோ திராவிட முன்னேற்றக் கழகமோ வழக்கு போடவில்லை இதுபோன்ற நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ளவில்லை.
பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மிக கேவலமாக, கீழ்த்தரமாக காங்கிரஸ்காரர்கள் பேசினார்கள். ஆக ஜனநாயகத்தில் சகிப்பு தன்மை வேண்டும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சிக்கு அது அறவே இல்லை என்பதை இந்த 60 நாளில் நிரூபித்து விட்டார்கள்.
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார் உடனே அவர் கைது செய்யப்பட்டார். இவர் இரண்டாவது எம்எல்ஏ கைது செய்யப்படுறார். அதாவது இது எதைக் காட்டுகிறது என்றால். மற்ற கட்சியில் இருந்தெல்லாம் எம்எல்ஏக்களை பல்வேறு வகையில அவர் கட்சி மாற்றி அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் திமுகவில் இருக்கிற எம்எல்ஏக்கள் வைரம் போன்ற தொண்டர்களாக இருக்கிற காரணத்தினால் அவர்களை மாற்றி கட்சியில் சேர்க்க முடியாது என்பதற்காக இப்படிப்பட்ட வழிகளை இந்த அரசு கையாளுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கிறது.
ஆறு எம்.எல்.ஏ.க்கள் கட்சிமாறி ஆளும் கட்சிக்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் போவதாக சொல்கிறார்கள். ஆனால் திமுகாவில இருந்து யாரும் போகாததனால் இவர்கள் மீது வழக்கு போடுவோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடியவர்கள் ஆகவே சட்ட ரீதியாக அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது.
அவர் அப்படி பேசி இருந்தா வழக்கு போடலாம். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தலாம். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆக மன உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கைது திமுக வினர் கைது செய்யப்படுகிறார்கள். எங்களை மட்டும் அல்ல சமூக வலைதளங்களில் கருத்து போடுபவர்களை கூட காவல்துறை கைது செய்கிறது. கொலைகள் கொள்ளைகள் நிறைய நடந்துட்டு இருக்கு அதை பற்றி விசாரிக்க இந்த காவல் துறைக்கு நேரம் இல்லை திமுகவை ஆதரித்து யாராவது செய்தி போட்டால் உடனே கைது.
காலையில் கூட செய்தி கேள்விப்பட்டேன். ஒரு இளைஞர் செய்தி போட்டுருக்கார். அவருக்கு ஃபாலோவர்ஸ் 60,000 பேர் அதை பார்த்திருக்காங்கன்னா உடனே காவல்துறை போய் மிரட்டி அதை நீக்கி இருக்காங்க. அதுக்கப்புறம் ஒரு ட்விட் போட்டுருக்காரு. அது 10,000 70,00 பேர் பார்த்திருக்காங்க. அதையும் நீக்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாம அவருடைய தாய் தந்தையரை போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து சென்று மிரட்டி உள்ளனர். நான் பகிரங்கமாக இந்த ஆட்சியின் மீது குற்றம் சாட்டுகிறேன். இதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.
அதேபோல புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயன் அவர்களை இந்த காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்துள்ளது. இதெல்லாம் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காதது இதெல்லாம் இப்போது நடக்கிறது.
ஆனால் அதேநேரத்தில் கொலையும் கொள்ளையும் பாலியல் வன்கொடுமையும் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு அந்த வேலை பார்ப்பதற்கு நேரமில்லாமல் திமுகவையும் இந்த ஆட்சியை விமர்சிக்கிறவர்களையும் கைது செய்து கொண்டுள்ளது.
திமுகவை தவிர மற்றவர்கள் எல்லாம் அந்த பக்கம் போய்விட்டதாக ஒரு எண்ணம் இருக்குகிறது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஒற்றை மனிதராக இருந்தாலும் திமுககாரன் நடுரோட்ல நின்னு தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசக்கூடிய தொண்டர்களை பெற்றிருக்கிற கட்சிதான் திமுக. எவ்வளவு பேரை கைது செய்து சிறை வைக்க முடியும்.
இதற்கு முன்பெல்லாம் அவதூறு பேச்சிற்காக யாரும் கைது செய்யப்பட்டதில்லை வழக்கு மட்டுமே போடப்படும். என் பேரில் 16 கேஸ் இருந்தது. கலைஞர், தளபதி மேல 40 கேஸ் இருந்தது. அந்த வழக்குக்கெல்லாம் எங்கள யாரும் கைது செய்யவில்லை. வெற்றி கொண்டான் அவர் மீது 300 கேஸ் போட்டாங்க. இன்று இருக்குற முதலமைச்சர் ஜெயலலிதாவைவிட, எம்ஜிஆரைவிட பெரிய தியாகம் ஒண்ணும் பண்ணிட்டு ஆட்சிக்கு வந்தவரல்ல. உண்மைகளை பேசுகிற போது அது ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை இருக்க வேண்டும். இனியாவது தன்னை திருத்தி கொள்ளவேண்டும்.
திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழிச்சிடலாம்னு நினைச்சா அவனை விட உலக மகா மடையன் யாரும் இருக்க முடியாது. ஆகவே இதுபோல எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் இது அரசாங்கத்துக்கும் மக்களுடைய வரிப்பணத்துக்கும் வீணான செலவு என்பதுதான் எங்களுடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!
-
பரந்தூர் விமான நிலையம் : மாற்று இடம் கேட்காத தமிழ்நாடு அரசு - தி.மு.க MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!
-
குதிரை பேரம் - சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும் : முரசொலி!