Politics
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
கரூரில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இல்லை. இது கட்சி நிகழ்ச்சியாகவே நடந்தது. இதில் பேசிய முதல்வர் விஜய்.. இல்லை இல்லை அங்கு கரூர் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய், வழக்கம்போல அவதூறுகளை அள்ளித் தெளித்து விட்டுள்ளார்.
கரூர் கொடுந்துயரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், காவல்துறை எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை. காவல்துறை நினைத்திருந்தால் அந்த பிரச்சாரக் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். ஆனால், காவலர்களே எங்களை அழைத்துக்கொண்டு சென்றனர். அப்போது எங்களுக்கு அந்த நாடகம் தெரியவில்லை என வாய்க்கு வந்தபடி அடித்து விட்டிருக்கிறார்.
ஒரு மிகப்பெரிய கொடுந்துயர சம்பவம் நடந்து, அதன் விசாரணை தற்போது சி.பி.ஐ வசம் உள்ளது. ஆனால், முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ளவர் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் தனது அரசியல் லாப நோக்கத்திற்காக பேசியுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த திமுக செய்தித் தொடர்புக் குழுத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவர், “கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று சென்னைக்கு ஓடிவந்த விஜய், இன்று தான் கரூர் செல்கிறார். மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைக்கூட பார்க்கவில்லை. ஆனால், இன்று நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்.
கரூர் விவகாரத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். மற்றபடி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.
காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இது அரைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
சட்டமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் பேசினால், எதிர்க்கட்சிகள் கேள்விதான் கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை என்றால் வெளிநடப்பு செய்வார்கள். இது சட்டமன்ற மரபே தவிர, எதிர்க்கட்சிகள் ஓடவில்லை. பார்ட்டி பண்ட் பற்றி பேசுகிறீர்களே, தற்போது நடைபெறும் குதிரைப் பேரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று பேசத் தயாரா?
அதிமுகவை தீர்ந்த சக்தி என்று கூறும் விஜய், அந்தக் கட்சியில் இருப்பவர்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பது ஏன்? கர்நாடகாவில் உள்ள கோவிலுக்குச் சென்றவர், அங்குள்ள முதலமைச்சரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேசாதது ஏன்?” என கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தனக்குத் துளியும் இதில் சம்மந்தமில்லை என்பதுபோல, தனது கட்சிக் கூட்டத்திற்கு வந்து இறந்துபோன மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு தலைவனால் மட்டுமே இவ்வாறு பேசமுடியும் அதனை பக்கவாக செய்திருக்கிறார் முதல்வர் விஜய் என்றே கூறவேண்டும்.
முழுக்க முழுக்க இடைத்தேர்தலை மட்டுமே மனதில் வைத்து இன்று நிகழ்த்தப்பட்ட பிரச்சார உரைக்கு மக்களே விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!