Politics
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி, தனது 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் முகமது முபாரக் அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர்.
பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?