Politics
தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் முதல் நீதித்துறை தரநிலைகள் வரை.. - திமுக எம்.பி-க்கள் கேள்வி!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை பிப்.1 மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான ஒரு விசயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேள்விகளும் எழுப்பினர்.
இதில் திமுக எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு :-
=> தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் - திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி.
தமிழ்நாட்டு மலைப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக துணை பொடுச் செயலாளர் ஆ. இராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டில், பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY), உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் மற்றும் பிரதான் மந்திரி சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) ஆகியவற்றில் அரசாங்கம் வகிக்கும் பங்கின் விவரங்கள் மற்றும் இதன்கீழ் தனியார் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட நிதி உதவியின் விவரங்கள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.
=> தேசிய நெடுஞ்சாலை தாமத்தினால் மோசமாக பாதிக்கபடுகிறது அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலை - உடனடி நடவடிக்கை கோரும் திமுக எம்.பி. செல்வம்
பெங்களூரு மற்றும் சென்னையை இணைக்கும் நான்கு வழி பசுமைச்சாலையின் பெரும்பாலான பகுதிகள் நிறைவடையும் தருவாயில் இருந்தாலும் அதில் அரக்கோணம்–காஞ்சிபுரம் இடையேயான 25.5 கி.மீட்டரில் சுமார் 11 கி.மீ மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என காஞ்சிபுரம் மக்களவை திமுக உறுப்பினர் செல்வம் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார். இந்த தாமதத்தின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் அரக்கோணம்-காஞ்சிபுரம் பிரிவில் ரயில்வே மேம்பாலங்கள், நிலம் கையகப்படுத்துதல் அல்லது நிறுவனங்களுக்கு இடையேயான அனுமதிகள் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்டவை காரணங்களாக அரசு சொன்னால் அது ஏற்புடையதல்ல என்றும் மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து விரைவுச் சாலையை முழுமையாக இயக்குவதை உறுதி செய்வதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
=> காலநிலை உச்சி மாநாடு(COP30) – முடிவுகள் என்ன? - திமுக எம்.பி. எஸ்.ஆர். சிவலிங்கம்
பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற COP30 உச்சி மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்று, காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளை விட நாம் பருவநிலை மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துகொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வளர்ந்த நாடுகளிடமிருந்து இதற்கான நிதிப் பாய்ச்சலை மும்மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பிரிவு 9.1 கடமைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் விவரங்கள் யாவை? COP30 மாநாட்டில் இந்தியாவின் சர்வதேச பருவநிலை நிதி கோரிக்கைகளுக்கும், 2023-24 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு தேசிய பருவநிலை மாற்றத் தகவமைப்பு நிதியுதவி நிறுத்தப்பட்டதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
=> தொழிலாளர் சட்டத் தொகுப்பு வரைவிற்கு மக்களின் கருத்துகளை பெற நடவடிக்கை என்ன? - திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா
தொழிலாளர் சட்டத் தொகுப்பு விதிகள் குறித்த வரைவுகளின்மீது அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களை பெறுகிறதா? என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார்.
மொத்தமுள்ள நான்கு சட்டத் தொகுப்புகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டதற்கான காரணங்கள் என்ன? கருத்துக்களைச் சமர்ப்பிக்க அதிகபட்சம் நாற்பத்தைந்து நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதால், தொழிலாளர்களுக்கும் மற்ற பங்குதாரர்களுக்கும் அனைத்து வரைவுகளுக்கும் திறம்படப் பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே உள்ளதை கருத்தில் கொள்ளாதது ஏன்? காலக்கெடுவை நீட்டிக்கவும், பரவலாகப் பரப்புவதற்கும், அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புகளை வழங்குவதற்கும் கோரி அமைச்சகத்திற்கு வந்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன? ஒரு திறமையான கலந்தாய்வு செயல்முறைக்கு போதுமான நேரத்தை வழங்கும் வகையில், கலந்தாய்வை மேலும் நாற்பத்தைந்து நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதா? எனும் பல்வேறு கேள்விகளையும் அவர் இணைத்துள்ளார்.
=> நீதித்துறை தரநிலைகள் நிர்ணயிக்கும் மசோதாவின் நிலை என்ன? - திமுக எம். பி. டாக்டர் கனிமொழி சோமு
நீதித்துறை தரநிலைகள் மற்றும் பொறுப்பேற்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளதா என்றும் அதை அறிமுகப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட காலக்கெடு என்ன என்றும் நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.
Also Read
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!