Politics
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (டிச.01) முதல் தொடங்கியுள்ள நிலையில், டிச.19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசு 13 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
எனினும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்த சூழலில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணி புரியும் ஊழியர்களின் பணிச்சுமை குறித்து எழுப்பிய கேள்விக்கு, அந்த துறை சார்ந்த அமைச்சர் "தகவல் தொழில்நுட்ப ஊழியர் பணிச்சுமை, மன அழுத்தம் பற்றி ஒன்றிய அரசிடம் ஆய்வுகள் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
=> கேள்வி -
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணி புரியும் ஊழியர்களின் பணிச் சுமை, மன அழுத்தம், உடல் நலம், தொழில்சார் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தரவுகளைக் கொண்டுள்ளதா? விரிவான ஆய்வு ஏதும் மேற்கொண்டதா? இல்லையெனில் சுகாதார நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பரிந்துரைகளை பெறுமா? என்ற கேள்வியை (எண் 38/1.12.2025) நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன்.
=> தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே பதில் -
தொழிலாளர் நலன் குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலில் வருவதால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டின் வரம்பிற்குள்ளும் வந்து விடுகிறது; மத்திய தொழில் உறவுகள் ஒன்றிய தொழில் துறை உறவுகளுக்கான அதிகாரிகள் வாயிலாகவும், மாநில அளவில் மாநில தொழிலாளர் துறையாலும் உறுதி செய்யப்படுகின்றன; பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் "கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்" கீழே வருவதால் அதற்கு பொருத்தமான அரசு, மாநில அரசு ஆகும்; ஒன்றிய அரசு தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 ஐ இயற்றியுள்ளது; இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலம், பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்கிற நோக்கம் கொண்டது என்று பதிலளித்துள்ளார்.
*கை கழுவலாமா ஒன்றிய அரசு?*
ஒன்றிய அமைச்சரின் பதில் பற்றி சு வெங்கடேசன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்,
"ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சரின் பதில் வினோதமாக இருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் போது இவர்களுக்கு கூட்டாட்சி பற்றியோ, மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்க வேண்டும் என்றோ அக்கறை இல்லை. ஏதாவது இவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியை எழுப்பினால் மட்டும் ஒத்திசைவு பட்டியல், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று பதில் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் பணிச் சுமைக்கும், உளவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2018 - 22 க்கு இடைப்பட்ட காலத்தில் 27% தற்கொலைகள் சமூகத்தில் அதிகரித்துள்ளன; சாமானியர்கள் மத்தியில் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியிலும் தற்கொலைகள் நிகழ்கின்றன; இத்தகைய சூழலில் தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் அது சார்ந்த சேவைகளில் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றிய ஆய்வுகளும் தரவுகளும் தேவை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் நடத்துவதே தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை கழுவுவது கண்டனத்திற்குரியது.
ஆனால் இந்த பதிலிலேயே, ஒன்றிய அரசின் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 இந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அவர்களின் நலனை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த தொகுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கே இந்த தொழில்களின் பிரத்யேக பணி நிலைமைகளை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அல்லது எந்த தரவுகள் அடிப்படையில் அது இறுதி செய்யப்பட்டது? தரவுகளே இல்லை என்றால், நிலைமைகள் பற்றிய தகவல்களும் இல்லையென்றால் நீங்கள் உருவாக்கியுள்ள தொகுப்புச் சட்டம் எப்படி அந்த தொழிலில் உள்ள பிரத்தியேக பிரச்சினைகளை கணக்கில் கொண்டிருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?"
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
டிட்வா : Orange Alert -ல் இருந்து Red Alert... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை விடுமுறை.. - விவரம்!