Politics

நிர்மலா சீதாராமனுக்கு இது புரியாது, ஏனெனில் அவருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை - முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (19-11-2025)

நிர்­ம­லா­வுக்­குப் புரி­யாது!

சில நாட்களுக்கு முன்னால் கோவை வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அளித்த பேட்டி, அவருக்கும் அரசியலுக்கும், மக்களுக்கும், மாநில விருப்பங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையே உணர்த்துகிறது. அவருக்கு எதுவுமே புரியவுமில்லை. புரிந்து கொள்ளும் தன்மையும் இல்லை. புரிய நினைக்கவும் இல்லை. அதற்காகத்தான் அவரை நிதி அமைச்சராக வைத்துள்ளார்கள் போலும்.

அதற்காகத்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு அனுப்பி பேட்டிகள் கொடுக்க வைக்கிறார்கள் போலும்!

• பிரதமர் அறிவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து சட்டங்களையும்நிறைவேற்றுகிறார்கள்.

•பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என அவரது திட்டங் க ளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

• பேரவையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம்நிறைவேற்றுகின்றனர்.

•இங்கு கல்வி என்றாலே எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துகிறார்கள்.

•நீட் மூலமாக ஏழைகள் படிக்கிறார்கள். அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. கிராமப்புற மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுகிறார்கள்.

•மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்யும் திராவிடக்கட்சி தி.மு.க.

• மத்திய அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதால் அதன் திட்டங்களை எதிர்க்கின்றனர்.

•மாநில அரசு கட்டும் வரியை எப்படி அந்த மாநிலத்திற்கே முழுமையாக திருப்பி தர முடியும்?

- அவர் சொன்னதை கோர்வையாகத் தொகுத்துப் பார்க்கும்போது கிடைத்தது இது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்துப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடியே திரும்பப் பெற்று விட்டார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசே நிறுத்தி வைத்திருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சித்தது. இதனை தெலுங்கானா மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடியே வலியுறுத்தினார்.தொகுதி மறுசீரமைப்பு மூலமாக, தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்பதால் தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது.

தொகுதி மறு சீரமைப்பை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றுவதன் மூலமாக - குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஒழுங்காக கடைப் பிடிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பின்னடைவைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிவைச் சந்திக்க வேண்டி வரும். இதன் மூலமாக தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசுவோர் எண்ணிக்கை குறையும். எனவேதான் தமிழ்நாடு எதிர்த்தது.

இந்தக் கடுமையான எதிர்ப்பைப் பார்த்து பின் வாங்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. 'அப்படி எந்தத் திட்டமும் இல்லை' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பின் வாங்கினார். இவை எல்லாம் தெரிந்து இருந்தால் நிதி அமைச்சர் இப்படி பேசி இருக்க மாட்டார். பா.ஜ.க. கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களுக்கும் தி.மு.க. தடை போடுவதாகச் சொல்லி, தி.மு.க. மீது தவறான கருத்தை உருவாக்க நினைக்கிறார் நிதி அமைச்சர். ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்பதைச் சொல்லி விட்டு, இதை எல்லாம் தடை செய்துவிட்டதாக நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டு இருந்தால் அதற்கு வரிசையாக பதில் சொல்லலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்த 11 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு அறிவித்த ஒரே சிறப்புத் திட்டம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதுதான். 2005 ஆம் ஆண்டு அருண் ஜெட்லி, ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த போது அறிவித்த திட்டம் இது. 2019 தேர்தலுக்கு முன்னதாக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இன்று வரை கட்டடம் எழுப்பவில்லை. இதுதான் பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாட்டின் மீதான அக்கறை ஆகும். 'எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை?' என்று கேட்பது தவறா? தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் என்னென்ன என்று கேட்பது தவறா?

நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள், தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு கொண்டு வந்ததிட்டங்களை முதலில் பட்டியல் இடவும். அதன்பிறகு விரிவான பதில் தரப்படும்.

பள்ளிக் கல்விக்காக தர வேண்டிய ரூ.2000 கோடியை விடுவிக்காதது யார் தவறு? மாநிலங்களின் வரி உரிமையை தர மறுப்பது யார்? ஒன்றிய அரசின் திட்டங்களும் மாநில நிதியால் நடைபெற்று வருவதை அறிவாரா அமைச்சர்? மூன்று மிகப்பெரிய பேரிடர் நடந்த பிறகும், அதற்கு நிவாரண நிதி தராதது நிர்மலாவின் துறைதானே?

எஸ்.ஐ.ஆர். பற்றியும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். “2000-ம் ஆண்டுக்கு பிறகு 4 முறை எஸ்.ஐ.ஆர் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையா? மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இருந்த போதும் எஸ்.ஐ.ஆர். நடந்துள்ளது." என்று சொல்லி இருக்கிறார்.

எஸ்.ஐ.ஆரை தி.மு.க. எதனால் எதிர்க்கிறது, என்ன சொல்லி எதிர்க்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை. “நாங்கள் வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் செய்வதை எதிர்க்கவில்லை. எதற்காக அவசர அவசரமாகச் செய்கிறீர்கள்? தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது ஏன் செய்கிறீர்கள்? மழை நேரத்தில் எதற்காகச் செய்கிறீர்கள்? பொறுமையாக, கால அவகாசம் கொடுத்து, நிதானமாகச் செய்ய வேண்டிய பணியை அவசரமாகச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்பதுதான் தி.மு.க. எழுப்பும் கேள்வி ஆகும்.

சுத்தமான, உண்மையான, நேர்மையான, ஒழுங்கான ஒரு வாக்காளர்பட்டியல் அமைவதை தி.மு.க.வோ, அதன் கூட்டணிக் கட்சிகளோ குறை சொல்லவில்லை. ஆனால் அதனைச் செய்ய நினைக்கவில்லை தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் இருக்கும் உண்மையான வாக்காளர்களை, எதைச் சொல்லியாவது நீக்க நினைக்கிறது தேர்தல் ஆணையம். அதனைத் தான் கடுமையாக எதிர்க்கிறோம். குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது தேர்தல் ஆணையம். அதனைத்தான் எதிர்க்கிறோம்.

இதெல்லாம் நிர்மலா சீதாராமனுக்கு புரியாது. ஏனென்றால் அவர் மக்கள் செல்வாக்கைப் பெற்று பதவிகளை அடைந்தவர் அல்ல. அவருக்கு மோடி செல்வாக்கு மட்டும் தான் உண்டு. அது போதும் என்று நினைப்பவரால் மக்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

Also Read: மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!