Politics
பாஜகவுக்குச் சாமரம் வீசுவதற்காகவே S.I.R-ஐ அதிமுக ஆதரித்தது! : என்.ஆர்.இளங்கோ எம்.பி கண்டனம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவது குறித்து திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தவை பின்வருமாறு,
பிஎல்ஏ2-க்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே நியமிக்க முடியும். நியமனம் செய்யப்பட்ட பிஎல்ஏ2-க்களுடைய பட்டியலைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிடும். இந்த பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் பிஎல்ஓ-க்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தகுதி பெற்றவர்கள்.
எஸ்ஐஆரை பொறுத்தவரை, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய பிஎல்ஏ2 ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்கள் வரை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் 27.10.2025 அன்றே உத்தரவில் சொல்லியிருக்கிறது.
மேலும், அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே.
எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து, தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரே, தன்னுடைய கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதற்கு, திமுகவின் பிஎல்ஏ-க்கள் தான் உதவி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தன்னுடைய இணையதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், திமுக ஏன் வாக்காளர் பட்டியல் சரி செய்ய வேண்டும் என்பதை இத்தனை நாட்களாக சொல்லவில்லை, அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 15.02.2004 அன்றே, வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்று தன் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறார். 2004 முதல் 2024 வரை, ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திமுகவின் அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி நூற்றுக்கும் மேலான கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், தகுதியற்ற யாரும் வாக்காளராகக் கூடாது, தகுதியுள்ள யாரும் நீக்கப்படக் கூடாது, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், குடிமாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்தை திமுக 2004 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறது.
அரசியல் கட்சிகள்தான் மக்களுடைய பிரதிநிதிகள். அவர்கள் தேர்தலில் ஒரு பெரிய பங்குதாரர்கள். அரசியல் கட்சிகளே S.I.R நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.
தேர்தல் ஆணையம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத போது, திமுக நீதிமன்றத்தில் தயங்காமல் பல வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு [WP. 19080/2020] இன்றும் நிலுவையில் உள்ளது.
சிற்றரசு தாக்கல் செய்த வழக்கு [WP 20426/2020]. கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தாக்கல் செய்த வழக்கு [WP 3199/2021], அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கு [WP 4342/2021] மற்றும் பிற வழக்குகள் [WP 7990/2021, WP 8085/2021, WP 9578/2021] என்று பல வழக்குகளைத் திமுக தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மனுக்கள், ஈவிஎம் இயந்திரம் தொடங்கி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் வரை, ஒரு தேர்தலை ஜனநாயகமாக நடத்துவது குறித்து மக்கள் பக்கம் நின்று குரல் எழுப்பக்கூடிய கட்சியாக திமுக மட்டுமே இருப்பதாகக் காட்டுகிறது. தற்போது முறையற்ற வகையில் செய்யக்கூடிய இந்த எஸ்ஐஆர்-ஐ தான் திமுக எதிர்க்கிறது.
இது களத்தில் செய்ய வேண்டிய ஒரு வேலை. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான தயாரிப்பு வேலைகளைச் செய்யத் தவறிவிட்டது. தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது.
முழுக்க முழுக்க பிஎல்ஓக்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பிஎல்ஓக்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை; இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது.
இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.
அசாமில் எஸ்ஐஆர் கொண்டு வந்தபோது, தேர்தல் ஆணைய அலுவலர்களே எல்லா கணக்கீட்டுப் படிவங்களையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். வாக்காளர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம்.
தமிழ்நாட்டுக்கும் அசாமுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? 12 மாநிலங்களுக்கும் அசாமுக்கும் ஏன் இந்த வித்தியாசம் காட்டுகிறீர்கள் என்று இளங்கோ கேள்வி எழுப்பினார். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், அந்தத் தொகுதியில் சாதாரணமாக வசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் முதலில் 11 அடையாள ஆவணங்களைச் சொன்னது. உச்ச நீதிமன்றம் சொன்னதால் ஆதார் சேர்க்கப்பட்டது. ஆனால், 13வது ஆவணமாக, பீகார் எஸ்ஐஆர்-இல், ஜூலை மாதம் 2025-ல் வெளியிடப்பட்ட பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அதை அடையாள ஆவணமாகக் காட்டலாம் என்று சொல்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உறுப்பினராக இருந்து தேர்தல் ஆணையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை, ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து மாற்றியது.
இந்தச் சட்டத்தில், பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் மட்டுமே நியமனத்தில் இருப்பார்கள் என்ற முறையைக் கொண்டு வந்தனர். 01.12.2023 அன்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை.
இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று சொல்லவில்லை. இந்தச் சட்டத்தின் விளைவாக, பாஜக தேர்ந்தெடுப்பவர்கள் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் இன்று மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இந்த எஸ்ஐஆர்-ஐ நடத்துகிறது.
திமுகழகம் எப்போதும் ஒரு முழுமையான, நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும், 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடி எந்தவொரு தனி மனிதரின் வாக்கும் பறி போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read
-
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!
-
“பணிநியமனம் மற்றும் பதவி உயர்வால் 4.5 ஆண்டுகளில் 1 இலட்சம் பேர் பயன்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட ரூ.1.50 கோடி வரை மானியம்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...