Politics
“பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ?” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.
அதற்கான தகுந்த சான்றை தற்போது தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. SIR படிவத்தில் “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என குறிப்பிட்டு பீகார் மக்களை தமிழ்நாட்டில் வாக்களிக்க வழி வகுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதனைக் கண்டிக்கும் வகையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு,
“தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது.
இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஆதாரத்தோடு செய்திகள் வந்தன.
இதனை தமிழ்நாட்டிலும் SIR என்ற பெயரில் செய்யத் துணிந்துள்ளது தேர்தல் ஆணையம்; அதாவது SIR படிவத்தில், சமர்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியலில், “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இது முறைகேடு இன்றி வேறென்ன?
தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ?
தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்!”
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!