Politics
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை இன்று (22/10/2025) சென்னை ரெட்டேரி லட்சுமிபுரத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி பாசறையை தொடங்கி வைத்து, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி ஆற்றிய உரை பின்வருமாறு,
“நான் எங்கு சென்றாலும் பெருமையாகச் சொல்லக்கூடிய ஒன்று, என்னுடைய ஹீரோ யார் என்றால், அது தந்தை பெரியார் தான். வேறு யாரும் எனக்கு ஹீரோ இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, படிக்கத் தெரிந்த நாளிலிருந்து, என் கண்களுக்கும், மனதிற்கும் ஒரே ஹீரோ பெரியார் மட்டுமே.
ஏனென்றால், தமிழ்நாட்டில் யாருடைய பெயரிலும் சாதி இருக்காது. ஆனால், தமிழ்நாடு தாண்டி வேறு மாநிலங்களில் யாராவது ஒருவரின் பெயரை கேட்டால், அவர்களுடைய சாதியையும் சேர்த்து சொல்வார்கள். மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும்.
அதனால், தமிழ்நாட்டில் சாதியே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், பெயரைச் சொல்லும்போது சாதியைச் சேர்த்து சொல்ல வெட்கப்படக்கூடிய ஒரு மாநிலம் எது என்றால் - அது தமிழ்நாடு. அதற்குக் காரணம் தந்தை பெரியார். அதனால்தான் அவர் என் ஹீரோ என்று சொல்கிறேன்.
இன்று திரையுலகத்திலிருந்து, மருத்துவத் துறையிலிருந்து, தமிழ்நாட்டில் மாற்றங்களை கொண்டு வருவேன் என்று பலர் கூறுகிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம், அதில் தவறு இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் திரைப்படத்துறையில் பணியாற்றியவர்தான்.
ஆனால் அவர்கள் என்ன கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்களின் மூலம் அரசியலுக்கு வர நினைப்பவர்கள், இந்த சமூகத்தில் பெண்களைப் பற்றி அவர்களின் படங்களில் என்ன கருத்துகளை பதிவு செய்தனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆணும் பெண்ணும் சமம்; அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று சொன்ன முதல் மனிதர் தந்தை பெரியார். பெண்களின் உரிமைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தது திராவிட இயக்கம்.
சுவிட்சர்லாந்து என்ற ஒரு வளர்ந்த, அழகான, பாதுகாப்பான நாடு இருக்கிறது. அந்த நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை 1971-ல்தான் கிடைத்தது, அதற்கு முன்பு கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை 1921 ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டது. அதை பெற்றுத் தந்தது நீதிக்கட்சி.
அதனால், நமது மாநிலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. இன்னும் பல தூரங்கள் கடக்க வேண்டியிருந்தாலும், நமக்காக பல தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.
பெண் காவலர்களை அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அது ஒரு மிகப் பெரிய மாற்றம். வீட்டில் அடிமையாக இருந்து வந்த பெண்கள், சமூகத்தில் கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். சொத்தில் சம உரிமையை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
எதற்காக பத்தாவது வரை படித்தால் மட்டும் தான் திருமண உதவி வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் வழங்கினால் வாக்கு அதிகமாக வருமே... என்றும் கலைஞரிடம் கேட்டார்கள். அதற்கு கலைஞர் சொன்ன பதில், “இது வாக்குக்காக கொண்டு வந்த திட்டம் அல்ல; பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்கான திட்டம்.”
இன்றைய காலகட்டத்தில் உயர் கல்வியை தொடருவதற்கு திட்டமிடல் அவசியம். அதனால் தான், கல்லூரி செல்லும் பெண்களுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். தாய்மார்கள் நிம்மதியாக வேலைக்கு செல்ல, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, ஒரு ஆட்சி என்பது பெண்களின் வாழ்க்கையை மாற்ற கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் 42% உழைக்கும் பெண்கள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. பெண்கள் கைகளில் காசு இருந்தால் தான், சுற்றியுள்ளவர்கள் அவர்களை மதிப்பார்கள் என மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பெண்கள் பெருமிதத்துடன் மகிழ்ச்சி அடைகிறார்கள். 10,000 முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண்களுக்கு மரியாதை அதிகமாக இருக்கும் என்ற நோக்கில் உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது மகளிர் உரிமைத் தொகை.
பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவத்தற்கு, யாருக்கும் அருகதை கிடையாது, உரிமையும் கிடையாது. உங்களின் வாழ்க்கை பற்றி, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் வெளியில் செல்வதையும், வருவதையும், அவள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னார்.
உங்களுடைய அரசியல் பயணம் மற்றும் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கு உங்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறது. எந்த தடை வந்தாலும், அதை காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. “Nobody worth it, you are only worth it.” இதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!