Politics

"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !

சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், ASIAN YOUTH CENTRE சார்பில் UNITED NATIONS DAY -2025 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஐ.நா-வின் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற விவாதப் போட்டியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: "நான் விவாதம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்ற இடம்தான் நாடாளுமன்றம். தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை. பல மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஒரு நல்ல விவாதம் இங்கு நடைபெற்றது. வெற்றி தோல்வி அனைத்தையும் தாண்டி, ஒருவரோடு ஒருவர் விவாதிக்க முடியும்.

சமூக வலைதளங்களில் பெண்கள் ஒரு கருத்தை முன்வைக்கும் போது, அதற்கு வரும் எதிர்வினைகளில் பெரும்பாலானவை அவமதிப்பான இருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கும், அதற்கு வரும் கருத்துகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், கீழ்த்தரமாக கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.

தற்போது இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்களை சரியானதா, தவறானதா என்பதைக் கூட யாரும் கேட்க விரும்பவில்லை. வேறுபட்ட கருத்துக்களையும் கேட்க யாருக்கும் விருப்பமில்லை. பிறர் கருத்துக்களை கேட்பதற்கும் முன்பே, “நீங்கள் சொல்வது தவறு, நான் சொல்வதே சரி” என்று சொல்கிறார்கள்.

சமீபத்தில், என் தோழி எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி அனுப்பினார். அதில், தந்தை பெரியாரின் வளர்ப்பில் உருவானவரும், திராவிட இயக்கத்தின் ஒரு முக்கிய உறுப்பினருமான லீலாவதி அம்மையார் பற்றியது அது. மகாத்மா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, அவரை சந்தித்து, ஜாதி, மதம், அவர் மௌனமாக இருந்த பல விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்து, ஒரு பேட்டி எடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட சூழல் மறுபடியும் இந்தியாவில் உருவாக வேண்டும். மிகப் பெரிய தலைவர்களிடமும் கேள்வி கேட்க முடியும் என்ற ஜனநாயகம் அப்போது இருந்தது. அப்படிப்பட்ட ஜனநாயக சமூகத்தை உங்களால் உருவாக்க முடியும். பல கலாச்சாரங்கள் மேற்கு நாடுகளிலிருந்து வந்ததாலேயே அவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஆனால் சில விஷயங்கள் நம்மை பழமையில் தள்ளிக் கொண்டு இருக்கும். எதுவாக இருந்தாலும் - கேள்வி கேளுங்கள், அது சரியா தவறா என்று சிந்தியுங்கள். “ஏன்? என்ற கேள்வியை உங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் கொண்டு செல்லுங்கள்.

யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்பது தந்தை பெரியார் சொன்ன கருத்து. அவர் வாழ்ந்து கொண்டு இருந்த மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதனால், நாம் எதையும் கண் மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை. எனது தந்தை தொடங்கிய பல்கலைக்கழகத்தில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டதிற்கு நன்றி" என்று பேசினார்.

Also Read: ஆப்கானின் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம்... மூடப்பட்ட தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா அறிவிப்பு !