Politics

ஆப்கானின் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம்... மூடப்பட்ட தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. அதிலும் சமீப சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது வரை தாலிபான் அரசாங்கத்தை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை. இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்து வந்தாலும், தாலிபான் அரசாங்கத்தை இதுவரை ஆதரிக்கவில்லை. இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் தாலிபன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி இந்தியா வந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் முடிவில் ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இது தெற்காசியாவில் முக்கிய அரசியல் திருப்பமாக மாறியுள்ளது.

Also Read: “தாலிபானின் பிற்போக்குத்தனமான செயலை எப்படி அனுமதிக்கலாம்?” : ஒன்றிய அரசுக்கு, கனிமொழி MP கடும் கண்டனம்!