Politics

"துயர சம்பவத்திலும் அரசியல் ஆதாயம்... தவெக நிர்வாகிகளுக்கு மனிதாபிமானமே இல்லை" - கனிமொழி விமர்சனம் !

கரூரில் விஜயின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்தனர். அப்படி அவதூறு பற்றிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரூர் துயரச் சம்பவத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தக்கட்ட தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதை பார்க்க முடிந்தது. ஆனால் தவெகவைச் சேர்ந்த ஒருவர் கூட அங்கு இல்லை. இந்நிகழ்வை பார்க்கப்போதும் தவெக நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதே தெரிகிறது!

எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் மக்களோடு நிற்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர், ஆறுதல் கூட சொல்லாமல் கடந்து போவதும், தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்வது நிச்சயமாக இதுவரை பார்த்திராத ஒன்று. அவரால் முடியவில்லை என்றாலும் அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

வன்முறையை தூண்டக்கூடிய செயலை யாரை செய்தாலும் அது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம். இப்படி செய்தவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை, துயர சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அவர்கள் நோக்கம் என்றுதான் நினைக்க முடியும்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருப்பது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம். வன்முறையை தூண்டக்கூடிய வகையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப்படி செய்பவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. துயர சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அவர்கள் நோக்கம்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக அரசு துணை நின்றது. தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நேரத்தில் யாரையும் பழிச் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தனிநபர் ஆணையம் நடத்தும் விசாரணையில் உண்மை தெரியப்போகிறது. அதேபோல் யார் மீது தவறு என்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார்.

நான் ஏற்கனவே ஊடகங்கள் மூலம் சொன்னதுதான். இளைஞர்கள் கொண்டாட்டமாக சென்று வாருங்கள். ஆனால் எதையும் சேதப்படுத்தாதீர்கள். பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்புங்கள்! மீண்டும் அந்த பிள்ளைகளுக்கு சொல்கிறேன். அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கி அயலகத்திற்கு பணிக்கு அனுப்புவது வரை கல்வி சார்ந்து ஏராளான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்கள் அதை தயவுசெய்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு பின்னர் அறிவு சார்ந்து யோசித்து யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவு செய்யுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள்... பாதுகாப்பாக இருங்கள்... உங்களை நம்பித்தான் உங்களுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்... அரசாங்கம் இருக்கிறது. திட்டங்கள் தீட்டப்படுகின்றன"என்று கூறினார்.

Also Read: கரூர் சம்பவம் : தொடர் அவதூறு பரப்பிய Youtuber ஃபெலிக்ஸ்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!