Politics

விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா ? - கரூர் மாவட்ட மின்வாரியத் தலைமை பொறியாளர் விளக்கம் !

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தார். குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பலர் ஒருவர் மேல் ஒருவரை மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில் 40 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்திகள் குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி, கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மின்வாரியத் தலைமை பொறியாளர் ராஜா லட்சுமி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கரூர் மின்வாரியத் தலைமை பொறியாளர் ராஜா லட்சுமி, "பொதுமக்களின் பாதுகாப்புக்காக கரூரில் விஜய் பேசும்போது அந்த இடத்தில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என மேற்கு மாவட்ட செயலாளர் 26-ம் தேதி மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கை மறுக்கப்பட்டது.

நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில மின்வாரியம் சார்பில் எந்த வித மின் தடையும் ஏற்படாத நிலையில், நிகழ்ச்சி நடத்திய தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த மின் விளக்குகள் அங்கிருந்த கூட்ட நெரிசலால் தடைபட்டது.கரூரில் விஜய் பேசுவதற்கு முன்னர் ரசிகர்கள் சிலர் அங்கிருந்த மரங்களில் ஏறியுள்ளனர். இதனால் அவர்களின் பாதுகாப்புக்காக சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்டு, காவல்துறை உதவியுடன் மரத்தில் ஏறியவர்கள் உடனடியாக கீழிறக்கப்பட்டனர். அதன் பின்னர் மீண்டும் அந்த பகுதியில் மின்சாரம் எந்தவித தடையும் இன்றி வழங்கப்பட்டது" என்று கூறினார்.

Also Read: கரூர் துயரம் : "காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் அதனை தவெக நிர்வாகிகள் புறக்கணித்தனர்"- டி.ஜி.பி பேட்டி !