Politics
GST குறைவு: “பாலுக்கு ஏன் விலையை குறைக்கல?”.. - கெத்தாக கேட்ட தமிழிசை, தொக்காக மாட்டிய சம்பவம் - பின்னணி?
மோடி தலைமையிலான பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கியமானது என்று சொன்னால், அனைத்து பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி என்ற வரியை விதித்தது தான். இந்த வரி விதிப்பால் உயர்தட்டு மக்களை விட, சாதாரண மக்களே பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது பெருவாரியாக சாமானிய மக்களையே பாதித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி மூலம் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துவரும் நிலையில், இதனால் மாநில அரசுகளின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றிய அரசு இதற்கு சிறப்பு நிதியை அளித்து வந்தது.
இந்த நிதி விரைவில் நிறுத்தப்படும் நிலையில், அதனை தொடர்ந்து வழங்கவேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி 5, 12, 18 மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விகிதம் கடந்த 22-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதில் பால் பொருட்கள் மீதான வரியும் குறைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் அந்த பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.
அதன்படி வரி குறைவு அமலுக்கு வந்த அன்றே, பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 200 கிராம் பன்னீர் ரூ.120 இருந்து 110 ரூபாய்க்கும், 500 கிராம் பன்னீர் ரூ.300 இருந்து 275 ரூபாயாகவும் குறைத்ததோடு, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக விலைக்குறைத்து அறிவித்தது.
இந்த நிலையில் ஆவின் பாலகத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன், பால் விலையை ஏன் குறைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியதோடு, ப்ளூ, க்ரீன், ஆரஞ்ச் ஆகிய 3 வகை பால் விலையை குறைக்காததை ஆவின் நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறித்த வீடியோ அனைவர் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஆவின் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கு GST இல்லை. பொதுவாக அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே GST உண்டு. இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மை அறியாமல் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
பாஜகவுக்கு பொய் பரப்புவது என்பது புதிதில்லை என்றாலும், உண்மை என்னவென்றே தெரியாமல் வம்படியாக வந்து சிக்குவது அண்மைக் காலமாக அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதில் தற்போது தமிழிசை சௌந்தரராஜனும் விதிவிலக்கில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
தற்போது உண்மையை அறியாமல் ஆர்வக் கோளாறால் தவறான தகவலை தெரிவித்த தமிழிசையை இணையவாசிகள் பலரும் கிண்டல் செய்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !