Politics
"இஸ்லாமியர்களுக்கு இடர் என்றால் முதலில் துணை நிற்கும் இயக்கம் திமுகதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, நபிகள் நாயகம் அவர்களின் 1500-வது பிறந்தநாள் விழா கலந்து கொண்டார்.
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மனிதகுலத்தின் மேன்மைக்கான நற்பண்புகளை வலியுறுத்திய நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
மதம் என்பதை நிறுவனமாக பார்க்காமல் - மார்க்கம் என்று பார்ப்பவர்கள் நீங்கள்! அந்த மார்க்கம் அன்பு மார்க்கமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நபிகளார் போதித்தார்; வலியுறுத்தினார்!
பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் முதன்முதலாக சந்தித்ததே, திருவாரூரில் நடந்த மிலாது நபி விழாவில்தான்! அதன்பிறகு, அவர்களுக்கிடையில் உருவான அன்புதான், இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்!
இன்றைக்கு இந்த மேடையில் தகைசால் தமிழர் பேராசிரியர் ஐயா காதர் மொகிதீன் அவர்கள் அமர்ந்திருக்கிறார். இதே மேடையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் அமர்ந்திருக்கிறார். தமிமுன் அன்சாரி அவர்களும் அமர்ந்திருக்கிறார். நெல்லை முபாரக் அவர்கள் என்று பலரும் ஒன்று கூடியிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை எந்நாளும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒற்றுமைதான் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கான, முதல் படி!
பழமைவாத அடக்குமுறைகளை எதிர்த்து, ஏழைகள் மீது கருணை பொழிந்து, பணக்காரர்களிடம் இருக்கும் பணம்; மற்றவர்களுக்கும் தர வேண்டியது, உனது நடத்தை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் நம்முடைய நபிகளார் அவர்கள்! சமத்துவத்தை வலியுறுத்திய சிந்தனையாளர் அவர்! வரலாற்றில் சிலர்தான் ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலை - வாய்ப்பை பெற்றவர்கள்! அப்படிப்பட்டவர்தான் நபிகள் பெருமான் அவர்கள்!
அதனால்தான், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், நபிகளார் சொன்ன சமத்துவத்தை – அன்பை புகழ்ந்தார்கள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நபிகள் பெருமானாரின் வாழ்வை, மூன்றே வரிகளில் எப்படி எடுத்துச் சொன்னார் என்றால்… “நபிகள் நாயகம் அவர்கள் - அன்பை, அமைதியை போதித்தார்; அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாக கருதினார். அடுத்தவர் நலன்கருதி ஆற்றும் அருட்பணிகளையே அறம் என வலியுறுத்தினர்." என்று சொன்னார்! அப்படிப்பட்ட நபிகளாரின் 1500-வது பிறந்தநாளில் காசாவில் நடத்தப்பட்டுவரும் துயரத்தைப் பார்த்து மனசாட்சி உள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். உடனடியாக பாலஸ்தீன மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளும் முடிவிற்கு வர வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் வலியுறுத்துகிறேன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் 1969-லேயே மீலாது நபிக்கு, அரசு விடுமுறை என்று அறிவித்தார். அதை 2001-இல் அ.தி.மு.க இரத்து செய்ததும், மறுபடியும் 2006-இல் கழக ஆட்சியில் விடுமுறை வழங்கியதும் உங்கள் எல்லோருக்கும் தெரியும்!
அதுமட்டுமல்ல... ஏன் நாங்கள் எப்போதும் உங்களில் ஒருவன் என்று சொல்கிறோம்! உங்களின் கோரிக்கைகளை ஆட்சியின்போது ஒவ்வொருமுறையும் பார்த்துப் பார்த்து செய்துகொடுத்தோம். அவற்றில் சிலவற்றை மட்டும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு
3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு.
உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. சிறுபான்மையினர் நல வாரியம் தொடக்கம்.
வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் தொடக்கம்
உருது அகாடமி தொடக்கம்
காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு - என்று இஸ்லாமிய மக்களின் நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த திட்டங்களையெல்லாம் பட்டியலிட தொடங்கினால், பல மணி நேரமாகும்!
இதன் தொடர்ச்சியாகதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், சென்னை விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும், ‘ஹஜ் இல்லம்’ உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை - முன்னெடுப்புகளை செய்துகொண்டு இருக்கிறோம்!
இப்போதும், இந்த மேடையில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்கள் நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏற்கெனவே, பெருந்தகை அவர்களைப்பற்றி தமிழ்நாடு பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையெல்லாம் பரிசீலித்து பரிசு வழங்க வேண்டும் என்று சொன்னீர்கள். உறுதியாக பரிசீலிக்கப்படும். நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவோம்.
அதுமட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வருகிறது என்றால், உங்களுக்கு துணை நிற்கும் முதல் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உண்மையான தோழமை உணர்வோடு போராடியது தி.மு.க.தான்! அந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியதும் - அந்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதும் யார் என்று, உங்களுக்கு நன்றாகவே தெரியும்!
அதேபோல், முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது அ.தி.மு.க. எப்படி இரட்டை வேடம் போட்டது என்று எல்லோருக்கும் தெரியும்! அதனால்தான், நம்முடைய அன்வர் ராஜா போன்றவர்கள், துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளை புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள்!
அதேபோல், வக்பு சட்டத் திருத்தத்திலும் அ.தி.மு.க. நடத்திய கபட நாடகத்தை எல்லோரும் பார்த்தார்கள்! ஆனால், தி.மு.க. உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தால்தான் இன்றைக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த முக்கியத் திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறோம்!
பா.ஜ.க. செய்து வரும் மலிவான சர்வாதிகார - எதேச்சாதிகார அரசியலுக்கு துணை போகக்கூடிய துரோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புறக்கணிக்க வேண்டும்! நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த விழா மேடையில் நின்று நான் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு உறுதியை தருகிறேன்…
இசுலாமிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் - பெற்றுத்தரும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் உங்கள் கூடவே உங்களில் ஒருவராக இருக்கும்!
நபிகளார் வலியுறுத்திய அன்பு, உலகெங்கும் - அனைத்து உள்ளங்களிலும் பரவ வேண்டும்! போர்கள் அற்ற - வன்முறைகள் அற்ற - வெறுப்புகள் அற்ற - ஆதிக்கம் அற்ற உலகமாக, நாம் வாழும் உலகம் மாற வேண்டும்! நபிகளார் சொன்ன பொன்மொழிகளை வாழ்வியல் நடைமுறைகளாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்! எங்கும் அமைதியும் நல்லிணக்கமும் உண்டாக வேண்டும் என்று சொல்லி! உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்"என்று கூறினார்.
Also Read
-
"பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, இது எனக்கும் பொருந்தும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு !
-
கல்வி நிதி மறுப்பு: "கல்வியை அரசியல் கருவியாக மாற்றுகிறது ஒன்றிய பாஜக அரசு"- செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய அடித்தளமாக இவை அமையும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“2026 தேர்தலுக்கு 6 மாதம் ‘கால்ஷீட்’ கொடுத்திருக்கிறார் விஜய்!” : விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் பதிலடி!
-
தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!