Politics
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை பாஜக குறிவைத்து நிதி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கல்விக்கான நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்தது பாஜக அரசு.
இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், இந்தியா கூட்டணி கட்சிகளும், மக்களும் குரல் கொடுத்தனர். தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இந்த குரல் ஒலித்தது. அதோடு பல்வேறு போராட்டங்களும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. எனினும் ஒன்றிய பாஜக அரசு வழக்கம்போல் இதனை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறது.
இந்த சூழலில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தை தொடர்ந்து, அவருக்கு இரத்த அழுத்தம் பிரச்சினை ஏற்பட்டது.
இதன் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், தனது போராட்டத்தை அவர் கைவிடாமல் தொடர்ந்தார். மேலும் அவரை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். எனினும் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சியினர் அவரை சந்தித்து பேசினர். மேலும் திமுக எம்.பி. கனிமொழி அவர்களும், சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்தார். மேலும் நமது உரிமைகளை பெறுவதற்கு சட்டத்தின் வழி போராடுவோம் என்றும், உடல்நலனை வருத்திக்கொள்ள வேண்டாம் என்றும், அவரை போராட்டத்தை கைவிடுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை, சசிகாந்திடம் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பழச்சாறு அருந்தி தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று (செப்.2) முடித்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில் எம்.பி., “ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமைகளை மீட்பதற்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன். கடந்த நான்கு நாட்களாக இந்த விஷயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா கூட்டணியை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று மருத்துவமனைக்கு வந்து உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதேபோல தமிழக முதலமைச்சர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாயிலாக இதே கருத்தை தான் தெரிவித்திருந்தார். எனவே இந்த உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளேன்
இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டமாக மாணவர் இயக்கங்களோடு, பல சமூக ஆர்வலர்களோடு, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளோடு, களத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு இந்த உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுகிறேன்.” என்றார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!