Politics

அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !

அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் பின்னலாடை, தோல், மீன் வளத் தொழில் நகரங்களான திருப்பூர், ஆம்பூர்-வாணியம்பாடி, தூத்துக்குடிக்குக் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியைப் போக்க ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் நடவடிக்கைகள் உலகம் முழுக்க பொருளாதாரச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத் துறையில் உலகமயம் ஏற்பட்ட பிறகு, ‘காட்’ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு, எதிலும் “உலக மயம் - தாராள மயம் - தனியார் மயம்” என்று ஆனதற்குப் பிறகு, எங்கு நடக்கும் பொருளாதார மாற்றங்களும், பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை நிலவரமாகும். அதிலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரி உயர்வுகள் மிகக் கடுமையான பாதிப்பினையும், பல நூறு கோடி இழப்புகளையும் உண்டாக்கியுள்ளன.

அமெரிக்காவின் இந்த திடீர் வரி உயர்வுகளைச் சில நாடுகள் உரிய எதிர் நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டுள்ளன. சில நாடுகள் பணிந்து ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல் உணவுகள், தோல்பொருள்கள், அறைகலன்கள், கம்பளங்கள் உள்ளிட்டவற்றுக்கு 50% அளவுக்கு வரியை நிர்ணயித்துள்ளது அமெரிக்கா. இது அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில் 66% ஆகும். அது மட்டுமல்லாமல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆகும்.

பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து!

பொதுவாக அமெரிக்காவின் இந்தத் திடீர் வரி உயர்வு ஏற்படுத்தியுள்ள தடைப் போன்ற தாக்குதலால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6% அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள தொழில்களில் ஒன்று ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில் மிக அதிகம் நடக்கும் திருப்பூர் ஆகும். ஆண்டுதோறும் திருப்பூரிலிருந்து 45,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடக்கிறது. இதில், 30% பின்னலாடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. (இது ஒட்டுமொத்த இந்தியப் பின்னலாடை ஏற்றுமதியில் 68% ஆகும்).

இம் மாதத் தொடக்கத்தில் (ஆகஸ்ட் 7) 25% வரியை விதித்து, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) முதல் அதன் மீது மேலும் 25% (மொத்தம் 50%) வரியை அமெரிக்கா விதித்திருப்பதால், நாளொன்றுக்கு 500 முதல் 700 கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்படும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி தற்போது திருப்பூர் மீது திணிக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் தொழில்வளர்ச்சி, வேலை வாய்ப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் வாழ்வளிக்கக் கூடியதாகும். அதையொட்டி, பல சிறு குறு நிறுவனங்கள் அங்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் விசித்திர பொருளாதாரக் கொள்கைகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் திருப்பூர் தொழில் முனைவோர் பாதிப்புக்குள்ளாகி, தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. இந்நிலையில் அடுத்த பெரும் தாக்குதலாக அமெரிக்காவின் வரி விதிப்பு அமைந்திருக்கிறது.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் பிரதமருக்குக் கடிதம்!

‘‘ரூ.15,000 கோடி தொழில் இழப்பு என்பது, தொழில் இழப்பு மட்டுமல்ல. 2 இலட்சம் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்வதுமாகும். பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும். அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு இலவச மின்சாரம், போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும்” என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள செய்தியில், “பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும். அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு இலவச மின்சாரம், போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும்” என்று ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்ததாக, அமெரிக்காவிற்கான இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி 2025 நிதியாண்டில் மொத்தம் 1.2 பில்லியன் டாலராக இருந்தது. இந்தத் துறையில் இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் 20% அமெரிக்க ஏற்றுமதியாகும். அதில் முதன்மை இடம் வகிப்பவை தமிழ்நாடும் (ஆம்பூர்-வாணியம்பாடி), உத்தரப்பிரதேச (ஆக்ரா-கான்பூர்) மாநிலங்களும் தான்.

தற்போது அமெரிக்க வரி உயர்வால் கடும் பாதிப்பு!

அதே போல, தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்க உள்ளது. தூத்துக்குடியில் உள்ள 15 நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 25 நிறுவனங்கள் அமெரிக்காவுக்குக் கடல் உணவுகளை அனுப்பும் நிலையில் தற்போது அமெரிக்க வரி உயர்வால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக நம் நாட்டில் இருந்து கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யும்போது Anti Dumping Duty 2.65 சதவீதம், CVD எனும் Countervailing Duty 5.77 சதவீதம் உள்ளது. இதனுடன் தற்போது டிரம்பின் 50 சதவீத வரி சேர்ந்துள்ளது. இதனால் கடல் உணவு ஏற்றுமதி மீதான வரி என்பது 58.42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியைப் பாதிக்கும்.

இந்த மூன்று துறைகள் மட்டுமல்ல, இவற்றைச் சார்ந்துள்ள நகரங்கள், நுகர்வு, தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

பொருளாதாரத் துறையிலும், வெளியுறவுத் துறையிலும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறைகள் இந்தியா மீது கடும் நெருக்கடிகளை உருவாக்கி வருவதைக் கடந்த 11 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதன் கொடூர பாதிப்புகள் அலை அலையாக வந்து தாக்குகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் சமூகத்தின் அனைத்து நிலைகளில் உள்ளோரையும் தாக்கும் அபாயம் கொண்டது.

இச்சூழலை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் தலைவர் பொருளாதார அறிஞர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ள கருத்து ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும். “அமெரிக்கா முதலில் விதித்த 25% வரி என்ற அடிப்படை வரியே (base tariff) இரு நாடுகளுக்கிடையிலான உறவு உடைந்துவிட்டது என்பதற்கான அடையாளம் தான். அந்த அடிப்படை வரி 25% என்பதே பிற ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை விட அதிகம். இப்போது அதையும் விட கூடுதலாக 25% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்நாட்டு உற்பத்தியிலும், எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும் சார்ந்திராத பல்வேறு உலக நாடுகளுடனும் வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும்; குறிப்பாக கிழக்கு நாடுகள், அய்ரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்னும் கருத்தை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு தரப்பு உடன்பாட்டின் பேரில்...

அமெரிக்கவின் இந்த வரி உயர்வை, சீனா, ‘பதிலுக்கு வரி உயர்வு, பன்னாட்டு வணிக நிறுவனத்தில் வழக்கு, அமெரிக்க நிறுவனங்கள் மீதான தடை’ என்று தன் போக்கில் எதிர்கொண்டு, தற்போது ஏற்றப்பட்ட வரி உயர்வை இரு தரப்பு உடன்பாட்டின் பேரில் குறைத்துள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கூட தங்களின் வெளியுறவுச் செயல்பாடுகள் மூலம் வரி உயர்வைக் குறைத்துக் கொண்டுள்ளன.

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குவதற்கு எதிரான நடவடிக்கைதான் அமெரிக்கா இந்தியா மீது எடுத்துள்ள கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை அமெரிக்கா விதித்துள்ள தண்டனை என்று ‘தி கார்டியன்’ இதழ் குறிப்பிடுகிறது. (The US president followed through on his threat to punish one of the world’s largest economies for its purchases of discounted Russian oil.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகக் குடியரசாக இந்த நாடு அமையும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதில் சோசலிசமும், மதச்சார்பின்மையும் பலி கொடுக்கப்பட்டுவிட்டன, ‘ஜனநாயகக் குடியரசு’ கடைசி மூச்சுக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. மிச்சமிருந்த இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இறையாண்மை மிக்க நாடான இந்தியா யாருடன் வர்த்தகம் செய்யலாம், யாருடன் செய்யக் கூடாது என்று இன்னொரு நாடான அமெரிக்கா முடிவு செய்வதா?

‘‘மானத்துடன் வாழ்வோம்’’ என்று பச்சைத் தமிழர் காமராசர் முழங்கினார்!

பச்சை தமிழர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் PL 480 scheme என்ற பெயரில் அமெரிக்காவின் அமைதிக்கான உணவுச் சட்டம், 1954–இன் படி வளரும் நாடுகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்புவது என்று முடிவெடுத்த போது, ‘‘மானத்துடன் வாழ்வோம்’’ என்று சென்னை கடற்கரையில் காமராசர் முழங்கியதை இந்த நேரத்தில் ஒன்றிய அரசுக்குக் காமராசர் பிறந்த மண்ணில் இருந்து நினைவூட்டுவது பொறுத்தமாகும்.

ஆனால், தற்போது அமெரிக்காவின் எந்தச் செயல்பாட்டுக்கும், குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த வரி உயர்வுகள், இந்தியர்களைக் கால் விலங்கிட்டுத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள், இந்திய-பாகிஸ்தான் போரை மிரட்டல் மூலம், தானே தடுத்து நிறுத்தியதாக 40 ஆம் முறையாகப் பேசியிருக்கும் பேச்சு என்று எதையும் கண்டுகொண்டு, உறுதியான உண்மையான பதிலையோ, நடவடிக்கைகளையோ ஒன்றிய அரசு மேற்கொணடதாகத் தெரியவில்லை.

ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

இத்தகைய சூழலில் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. திருப்பூர் உள்ளிட்ட கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தொழில் பகுதிகளுக்குத் தேவையான மானியங்களை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும். அவர்களின் சுமையில் பெருமளவு குறைய உடனடியாக வகை செய்யவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுத்துள்ள வேண்டுகோள்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. அமெரிக்காவைச் சார்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தரும் போக்கைக் கைவிட்டு, அய்ரோப்பிய நாடுகளுடனான தொழில் உறவை வளர்த்து, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும். ஒற்றை நாட்டின் கட்டுப்பாடுகள், திடீரென இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாத வண்ணம் திட்டமிட வேண்டும்.

3. பிரதமர் நேருவின் ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்டு, உலக நாடுகள் பலவற்றிற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த “அணி சேராக் கொள்கையை’’ முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இந்தியாவின் நன்மைக்கும் உலக அமைதிக்கும் எது உகந்ததோ, அதை, அந்தந்த விவகாரத்தில் எடுக்கும் படியான கொள்கை வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, ஏன் சீனா உடனான உறவுகளைக் கூட எப்படி அமைய வேண்டும் என்பதைத் துணிவுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அண்டை நாடுகளை நட்பு நாடுகளாகவே பரிபாலிக்கும் வெளியுறவுக் கொள்கை வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சிறு நாடுகளையும், வளரும் நாடுகளையும் வழிநடத்தும் நாடாகத் திகழ வேண்டும். வெற்று விளம்பரப் பயணங்கள் மட்டும் அத்தகைய உறவை வளர்க்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள...

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு தொழிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அதீத நெருக்கடிக்கு, பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளே காரணமாகும். அதைச் சரிசெய்ய துணிச்சலான வேகமான நடவடிக்கைகள் தேவை. தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, உரிய நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறோம்!

Also Read: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்­டர்­கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!