Politics

குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பாட்னா, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை வழங்கியுள்ளது. மத்திய பிரதேசதத்தை சேர்ந்த மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை வழங்கி உள்ளது.

இதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விபுல் பஞ்சோலி 2023 ஆம் ஆண்டு குஜராத்திலிருந்து பாட்னாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் உறுப்பினர் நீதிபதி நாகரத்னா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

judiciary nagarathna

குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னாவுக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டது என்பதே ஒரு வழக்கமான நடவடிக்கை அல்ல என்று நீதிபதி நாகரத்னா சுட்டிக்காட்டி உள்ளார். அதனை குறிப்பிட்டு, இவரது நியமனம் நீதி நிர்வாகத்துக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது கொலிஜியம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி விபுல் பஞ்சோலி சீனியாரிட்டி பட்டியலில் 57 வது இடத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இவருக்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள பல தகுதிவாய்ந்த சீனியர் நீதிபதிகளில் ஒருவரை பரிந்துரைக்கலாம் என்றும், பல உயர்நீதிமன்றங்களுக்கு உரிய வாய்ப்பு இல்லாமல் உள்ளதை நீதிபதி நாகரத்னா தனது எதிர்ப்பு குறிப்பில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !