Politics
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
சென்னை, தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (24.8.2025) மாலை ‘இந்தியா’ கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட இந்திய கூட்டணித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களிடம் தனக்கு ஆதரவு கேட்டுப் பேசுகையில், “கூட்டாட்சிக் கருத்தியலின் காப்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்! கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க அவர் துணிச்சலுடன் போராடுகிறார்!” என்றும், “எனக்கு வாக்களித்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நீதியரசர் சுதர்சன் ரெட்டி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு வாய்ந்த திராவிடக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சிறந்த தலைவர்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
இந்த வேளையில் தந்தை பெரியார், காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற மகத்தான தலைவர்களை இவ்வாறு நினைவு கூர்கிறேன்.
மேலும், இந்தக் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், இசையை பிரதிநிதித்துவப்படுத்திய திருவள்ளுவர், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ராஜாஜி போன்ற தலைவர்களுக்கும், இந்த மாபெரும் நிலமான தமிழ்நாட்டிற்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து பெரிய நாகரிகங்களும் மனிதச் சமுதாயங்களும் ஒரு உண்மையை அறிந்திருந்தன. அதாவது, மனிதன் கற்பனை செய்யும் திறன் கொண்டவன். இந்தியா அந்தக் கற்பனைத் திறனை வளர்த்தது. ஆனால், இந்தியாவில் அந்தக் கற்பனைத் திறனை மிகச்சிறப்பாக வளர்த்த மாநிலம் தமிழ்நாடு. இந்த தொலைநோக்குப் பார்வை இல்லையெனில் இன்று தமிழ்நாடு முன்னேற்ற நிலையை எட்டியிருக்காது.
முன்னோடி மாநிலம்!
தமிழ்நாடானது, மனித வள மேம்பாட்டுக் குறியீடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் இந்தியாவை முழுவதுமாக முன்னெடுத்துச் செல்கிறது. சமூகத்தின் பின்தங்கியோருக்கான சமூக – பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகும். அது என் இதயத்திற்கு மிக நெருக்கமானது.
நான் வழங்கிய தீர்ப்புகள் குறித்து நான் பேசுவதில்லை. அதைப் பற்றி நீங்களும் சமூகமுமே தீர்மானிக்க வேண்டும். நான் அரசியல் சாசனத்தை உண்மையாகவும், தொண்டுணர்வுடனும் தூக்கிப் பிடித்தவன். இப்போது, நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்புத் தந்தால் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
நான் உங்கள் முன் நின்று கூறுகிறேன், கூட்டாட்சித் தத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் கைவிடமாட்டேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டாட்சித் தத்துவத்தின் வீரனாகத் திகழ்கிறார். மேலும், அவர் அரசியல் சாசனத்தின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார். அவர் தற்போது வரை ஏராளமான சவால்களைச் சந்தித்து, அவற்றை மிகவும் தீரத்துடன் எதிர்த்து வருகிறார்.
அரசியல் சாசனம் ஆபத்தில்!
இந்தியாவின் அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. “ஒரே நாடு” என்று பேசுகிறார்கள். ஆனால், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக “ஒரே நாடு” என்று பேசுபவர்களிடம் இருந்து தொடர்ந்து பல சவால்களைச் சந்தித்து வருகிறார்.
பின்னர், சுதர்சன் ரெட்டி அவர்கள் செய்தியாளர்களிடம்:–
நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டுள்ளேன். எந்த அரசியல் கட்சியிலும் நான் சேர்ந்திராததால்தான் எதிர்க்கட்சிகள் என்னைத் துல்லியமாகத் தேர்வு செய்துள்ளன. அந்தந்த அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு தலைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நாட்டின் 60 விழுக்காடு வாக்காளர்களின் பிரதிநிதியாக நான் நிறுத்தப்பட்டுள்ளேன்.
இந்தப் பயணம் எனக்கு 1971 முதல் தொடர்கிறது. குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது அரசியல் நிறுவனம் அல்ல. அதனைச் சார்பின்றி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. என்னைப் பொருத்தமான வேட்பாளராகக் கருதிய அனைவருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வழங்குகிறேன்.
வாக்குறுதி!
நான் ஒரு சுதந்திர அரசியல் ஜனநாயகவாதி. அரசியலமைப்பின்படியே எனது கடமைகளை நிறைவேற்றி வந்துள்ளேன். அவ்வாறே இனியும் செயல்படுவேன்.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!