Politics
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் இன்றுடன் (ஆக 21) நிறைவடையவுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமித்ஷா புது சட்டமசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது, ஒரு முதலமைச்சரோ, அமைச்சரோ, பிரதமரோ ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-வது நாள் அவர்களை பதவி நீக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இதன்படி, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும், 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நேற்றே நாடாளுமன்றத்தில் இதன் நகலை கிழித்து தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்கனவே அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்து, பாஜகவுக்கு கட்டுப்படாத எதிர்க்கட்சிகளை குறிவைத்து பழிவாங்கும் நிலையில், இது எதிர்க்கட்சிகளை மேலும் ஒடுக்கும் மசோதாகவே உள்ளது.
இதற்கு அனைவரும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்யும் புதிய சட்டமுன்வடிவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் வெல்லும் தம் கூட்டணி அல்லாத அரசுகளை சட்டவிரோதமாக அகற்றுவதற்கான 'சதியை' ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கிறது. இது மக்களாட்சியை ஒடுக்க பாஜக முன்னெடுக்கும் சதியாகவும் அமைந்துள்ளது.
இந்த மசோதா கடுமையானது மட்டுமல்ல அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான முன் முயற்சியாகவும் இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
கடுமையான குற்றவியல் ரீதியான வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருக்கையில் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் புதிய சட்டமுன்வடிவு கடுமையான அதிருப்தியை எதிர்க்கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிக்கோளில் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தச் சட்ட முன்வடிவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?