Politics

பீகாரில் 124 வயதில் வாக்காளரா? : தேர்தல் ஆணையத்தை கண்டித்த இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களாட்சி முறையையும் சிதைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு வகையில் சூழ்ச்சி செய்து, வெவ்வேறு வகையான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனைக் கண்டித்து இந்திய அளவில் அரசமைப்பின் அடிப்படையை உறுதிசெய்ய இந்தியா கூட்டணியில் இருக்கிற தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.

அவ்வகையில், பீகாரில் இருந்து தொடங்கியிருக்கிற தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியல் (SIR) எளிய மக்களின் வாக்குரிமைகளை பறிக்கும் வகையிலும், அதிகாரத்துவத்தின் கருவியாக செயல்படும் வகையிலும் அமைந்துள்ளதைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மக்கள் நிகராளிகள் (பிரதிநிதிகள்), குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய நாள்(ஆகஸ்ட் 11) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முதல் தேர்தல் ஆணையம் வரை, வாக்கு திருட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. அப்போது மக்களின் நிகராளிகள் என்றும் பாராமல், டெல்லி காவல்துறை அவர்களை இடைமறித்து வலுக்கட்டாயமாக கைது செய்தது.

எனினும், இந்திய மக்களின் உரிமையைப் பேணுவதற்கு, கைது நடவடிக்கைக்கு பிறகும் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (ஆகஸ்ட் 12) நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து கண்டனப் போராட்டம் நடத்தினர்.

அப்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், மிந்தா தேவி பெயர் மற்றும் படம் பொறித்த உடையை அணிந்து போராடினர்.

மிந்தா தேவி என்பவர், தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்து வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிற 124 வயது வாக்காளர்.

வியப்பு என்னவென்றால், 124 வயதாகியும் மிந்தா தேவி முகத்தில் சிறு முதுமையும் தென்படாமல் இருப்பதுதான். மேலும், உலகிலேயே இதுவரை எவரும் 122 வயதைக் கடந்து வாழ்ந்ததில்லை என புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், பீகாரில் ‘மிந்தா தேவி’ என்கிற 124 வயதுடைய வாக்காளர் உள்ளார் என தேர்தல் ஆணையம் பொய்யான பட்டியல் தயாரித்தது கூடுதல் வியப்பூட்டும் செய்தியாக இருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டும் விதமாகவே, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிந்தா தேவி பெயர் மற்றும் படம் பொறித்த உடையை அணிந்து போராடினர்.

இது குறித்து கேலி செய்யும் விதமாக, காங்கிரஸ் முத்த தலைவர் பவன் கேரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மிந்தா தேவியை பெருமையுடன் கின்னஸ் உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கிறோம். இளம் தோற்றம் கொண்ட முதிய நபர் என்கிற சாதனையை அவர் செய்திருக்கிறார். இளைஞராக இருக்கும் அவருக்கு வயது 124 என்கிறது வாக்காளர் பட்டியல். தேர்தல் ஆணையம் நிகழ்த்தியிருக்கும் பல அதிசயங்களில் இதுவும் ஒன்று!” என பதிவிட்டுள்ளார்.

Also Read: “திருக்கோயில் அர்ச்சகர்களின் அடுத்த தலைமுறையினருக்கு கல்வி உதவித்தொகை!” : முதலமைச்சர் வழங்கினார்!