Politics

ஒரு வாரமாக நடைபெறாத விவாதம்... நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு : முரசொலி !

முரசொலி தலையங்கம் (28-07-2025)

விவாதிப்பதில் என்ன தவறு?

நாடாளுமன்றம் கடந்த 21 ஆம் தேதி கூடியது. ஒரு வார காலமாக முறையாக எந்த விவாதமும் நடக்கவில்லை. விவாதங்கள் நடத்துவதற்காகத் தான் நாடாளுமன்றம் இருக்கிறது. அதைக் கூடச் செய்யாமல் பா.ஜ.க. தரப்பு தடுத்துவருவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.

“நாடாளுமன்றத்தை முடக்குவது அரசை விட எதிர்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தை விவாதம் நடத்தாமல் வைத்திருப்பது ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு அவமானம் இல்லையா?

“நாடாளுமன்றம் இடையூறு இன்றி செயல்படும் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பி ஒன்றிய அரசை பொறுப்புக் கூற முடியும். அமைச்சர்களும் கடுமையான கேள்விகளை எதிர்கொள்வார்கள். ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவையை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. அவை அலுவல்களை முடக்குபவர்கள், அரசுக்கு சேதம் விளைவிப்பதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் தங்களின் ஜனநாயகப் பங்களிப்பை பலவீனப்படுத்துகிறார்கள்” என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு நல்லபிள்ளையைப் போல வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சில பிரச்சினைகளைக் கிளப்புகின்றன. அந்தப் பிரச்சினைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால் ஏன் முடக்கப் போகிறார்கள்? ஒரு பிரச்சினையை விவாதியுங்கள் என்று சொல்வது எப்படி தவறாகும்? நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது எதிர்வினையே தவிர, நேரடியான செயல் அல்ல.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கை ஆகும். விவாதம் நடத்தி இருந்தாலோ விளக்கம் அளித்திருந்தாலோ எதிர்க்கட்சிகள் அமைதியாகி இருப்பார்களே! எதற்காக முடக்கப் போகிறார்கள்?

“அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருந்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு ஒரு வாரத்தை வீணடித்து விட்டதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார். விவாதிக்கத் தயார் என்று தேதி குறித்தால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்களா? அப்படி அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டதா? இல்லை.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்ப நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அதில் சில மர்மமான பகுதிகள் இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 உயிர்கள் கொல்லப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். ஏப்ரல் 24 பொது மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி,“இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்” என்றார். பாகிஸ்தான் நிலைகள் மீது போர் தொடுக்கப்பட்டது. தீவிரவாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் பதில் தாக்குதலை நடத்தியது. திடீரென்று போர் நிறுத்தப்பட்டது. ‘நான் தான் போரை நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னார். இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுக்கவில்லை. பஹல்காம் தாக்குதலை நடத்தியதாக அடையாளம் காணப்பட்ட நான்கு தீவிரவாதிகளும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதுதான் மூன்று மாத நிலைமை ஆகும். இதனைப் பற்றி விவாதம் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் திரைமறைவில் பா.ஜ.க. மாபெரும் ஜனநாயகப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பீகாரில் ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (special intensive revision –SIR) பீகார் அரசு எடுத்து வருகிறது. இதற்கு அங்குள்ளஎதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2003–ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தின் இன்னொரு வடிவம் போல இதனை மாற்றி விட்டார்கள். இந்த ஆவணங்கள் இல்லை என்றால், அவர்களது பெற்றோர்களின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார். இந்த அடிப்படையில் சுமார் 60 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டார்கள்.

“பா.ஜ.க.வுக்கு எதிரானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது” என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. தேர்தல் நெருக்கத்தில் இது போன்ற நடவடிக்கை எடுப்பது, மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். இது பற்றி விவாதம் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவை இரண்டு பற்றியும் விவாதம் நடத்துவதில் என்ன தயக்கம் இருக்கிறது? ஏன் தயங்க வேண்டும்? பதில் சொல்வது ஆளும் பா.ஜ.க. அரசின் கடமை அல்லவா?

Also Read: சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு !