Politics

10 தோல்வி பழ­னி­சா­மி­யின் ஆயிரம் பொய்கள்... நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு விமர்சித்த முரசொலி !

முரசொலி தலையங்கம் (22-07-2025)

பத்து தோல்வி பழ­னி­சா­மி­யின் ஆயி­ரம் பொய்­கள்!

“அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தேன். எனது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருந்தது” என்று பழனிசாமி நாள்தோறும் பேசி வருகிறார். அவர் தமிழ்நாட்டை அதளபாதாளத்தில் கொண்டு போனார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

7.12.2020 நாளிட்ட ‘இந்தியா டுடே' ஏடு வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி ஐந்து ஆண்டுகளின் (2015-20) செயல்பாட்டில் 19 ஆவது இடம் தரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சிக்கு. 20 மாநிலங்களில் 19 ஆவது இடம். கடைசியில் இருந்து இரண்டாவது இடம் என்று வேண்டுமானால் பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

*பழனிசாமி ஆட்சி எப்படி இருந்தது என்பதை அந்தக் காலக்கட்டத்து ‘இந்தியா டுடே' வெளியிட்ட கருத்துக் கணிப்பின் மூலமாக நன்கு அறியலாம். 7.12.2020 நாளிட்ட 'இந்தியா டுடே' ஏடு வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி...

*உள்கட்டமைப்பில் 20 வது இடம்

*ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்

*விவசாயத்தில் 19 ஆவது இடம்

*சுற்றுலாவில் 13 ஆவது இடம்

*உள்ளடக்கிய வளர்ச்சியில் 13 ஆவது இடம்

*தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்

*ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்

*தூய்மையில் 12 ஆவது இடம்

*சுகாதாரத்தில் 11 ஆவது இடம்

*கல்வியில் 3 ஆவது இடம்

- இதுதான் பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு இருந்த இடம்.

இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்ஜாலம் காட்டுகிறார் பழனிசாமி.

*2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருந்தவை பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?

*சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம்.

*தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’.

*ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.

*10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.

*திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.

*58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.

*மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.

*விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

*பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள்.

*நீதிமன்றங்களில் தமிழ்மொழி.

*தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

*வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.

*தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.

*மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.

- இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை அ.தி.மு.க. ஆட்சியில். பழனி சாமிக்கு இவை ஏதாவது நினைவில் இருக்கிறதா?

*2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையாவது நிறைவேற்றினார்களா? என்றால் அதுவும் இல்லை.

2016 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது நினைவில் இருக்கிறதா?அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும், பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்- இப்படிச் சொன்னது எதையும் செய்யவில்லை.

அனைத்துப் பெண்களுக்கும் ஸ்கூட்டர் என்றார்கள். பின்னர் ஸ்கூட்டர் விலையில் 50 சதவிகிதமோ அல்லது 25 ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அந்த தொகைதான் மானியமாகக் கொடுத்தார்கள். அதனால் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்குப் பாதி தொகை வழங்கப்படவில்லை. 'ஆதி திராவிடர் பழங்குடி யினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்களும் நீராவி இட்லி குக்கர்களும் வழங்கப்படும்' என்று அறிவித்தார்கள். தரவில்லை. நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முதல்வர் பழனிசாமி ஆட்சியில் உறங்கிக் கொண்டிருந்தது. 'அம்பேத்கர் கொள்கையை பரப்ப 5 கோடியில் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவப்படும்' என்ற அறிவிப்பு நகரவே இல்லை.

“ 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் 10 கோடியில்உருவாக்கப்படும்” என 2017 ஜூனில் அறிவித்தது அ.தி.மு.க. ஆட்சி. உருவாக்கவில்லை. அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ.100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்றார்கள். செய்யவில்லை.

தனது சொந்தத் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா என்றால் அதுவும் இல்லை.

1. எடப்பாடி தொகுதியில் ஜவுளி பூங்கா

2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்

3. கொங்கணாபுரத்தில் தொழில்பேட்டை

4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு

5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு

6. கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்

7. மின் மயானங்கள்

8. தேங்காய், மா, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை

9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்

10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்

- இவை அனைத்தும் பழனிச்சாமி, எடப்பாடித் தொகுதிக்குச் செய்து தருவதாகச் சொன்ன வாக்குறுதிகள். இதனை நிறைவேற்றித் தரவில்லை என்றுதான் அந்த தொகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; தனது சொந்தத் தொகுதி மக்களுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தராமல் தமிழ்நாட்டை தரை மட்டத்துக்கு இறக்கியவர்தான் பழனிசாமி.

Also Read: துர்கா ஸ்டாலினின் “அவரும் நானும் - பாகம் 2” நூல் வெளியீடு! : எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார்!