Politics

சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை‌ இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !

சாதி சமய உணர்வுகளைக் களையும் முயற்சியாக பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு இந்த செயல் முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை‌ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் அந்தந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எந்தெந்த சமூகத்தை சார்ந்தவர்கள் என எளிதில் அடையாளம் காண முடியும். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பள்ளி கல்லூரிகளில் சாதிய களைவது குறித்து ஆலோசனை பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு பிரிவுகளில் உள்ள விடுதிகளின் பெயரை சமூக நீதி விடுதியென பெயர் மாற்றம் செய்துள்ளது ஒரு சிறந்த முன்னெடுப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பார்க்கிறேன்.

இது வெறும் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்தது மட்டும் பார்க்க முடியாது. அதன் பின்னால் பல்வேறு துறையின் கீழ் விடுதிகள் செயல்பட்டாலும் அனைத்து மாணவர்களும் சமமென சமூக நீதி சமத்துவ சிந்தனை‌யை அடையாளப்படுத்தும் வகையில் விடுதி பெயர் மாற்றம் பயன்படும்.இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: 4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?