Politics
“செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை மாணவி பாலியல் வழக்கில், 5 மாதங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனைப் பெற்றுத் தந்த தமிழ்நாடு காவல்துறையை பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரன் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர். பின்னர் கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28ம் தேதி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 2025 ஜனவரி மாதம் 5ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிபதி ராஜலட்சுமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!
விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!