Politics
தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்... விவரம் உள்ளே !
தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை ஆர்.கே. சாலையில் அமைந்துள்ள உட்லண்டஸ் ஓட்டலில், கழக துணைப் பொதுச்செயலாளர், ஆ.இராசா, எம்.பி., அவர்கள் தலைமையில் தி.மு.க மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் - 1
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நியாயமான நிதி உரிமையை பெற்றுத்தர நிதி ஆயோக் கூட்டத்தின் மூலமாக உரிமை குரல் எழப்பிய கழகத் தலைவருக்கு நன்றி.
நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாக நிலைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10% அளவிற்கு உள்ளது. அது 15% அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தெரிவித்ததுடன், பிரதமர் அவர்களிடம் தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ள நிதியை ஒதுக்கக் கோரி நேரடியாகவே வலியுறுத்தியிருக்கிறார் திராவிட மாடல் நாயகர், கழகத் தலைவர் அவர்கள். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உரிமையைப் பெற்றுத்தர டெல்லி சென்று உரிமைக் குரல் கொடுத்துத் திரும்பியிருக்கும் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி.
தீர்மானம் - 2
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்கச் சட்டப் போராட்டம் நடத்தும் முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத்தந்ததோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றத்தின்மூலம் ஒப்புதல் வாங்கிய கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும். மேலும், அதோடு நிற்காமல் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காததற்கு எதிராகவும், வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் முதல்வர் அவர்கள் மேற்கொண்டு வரும் சட்டப்போராட்டத்துக்கு மாணவர் அணி உறுதுணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம் - 3
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என் அறிவித்துள்ள கழகத் தலைவருக்கு நன்றி
டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், பின்தங்கிய பகுதி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கவும், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், உலகத்தர வசதிகளோடு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாகத் திகழும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு பல்கலைக்கழகம் இயங்கும் என அறிவித்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம் - 4
நான் முதல்வன் திட்டத்தை வடிவமைத்து, கழகத் தலைவர் தாயுமானவருக்கு உற்ற துணையாக இருக்கும் நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி இளந்தலைவர் அவர்களுக்கு நன்றி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுகளில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சாமானிய வீடுகளில் பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுதக் கூடியவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் நான் முதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி, கழகத் தலைவருக்கு உற்ற துணையாக இருக்கும் கழக இளந்தலைவர் உதய் அண்ணா அவர்களுக்கு நன்றி.
தீர்மானம் - 5
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த கழகத் தலைவருக்கு நன்றி.
கடந்த கால அடிமை எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகளால் இளம்பெண்கள் பலர் மிரட்டி, அடித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டன. அந்தப் பாலியல் குற்றவாளிகளைச் சட்டத்தின்பிடியிலிருந்து தப்புவிக்கவும் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நமது கழகத் தலைவர் பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என நம்பிக்கை கொடுத்தோடு பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவேண்டும், கழகம் அவர்களுக்கு துணை நிற்கும். உண்மைக்கு குற்றவாளிகள் தடுக்கப்படும் வரை ஓயமாட்டேன் எனப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புகார் கொடுக்க துணிச்சலைக் கொடுத்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டப்பாதுகாப்பு அளித்ததோடு அந்தப் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தற்போது தண்டனையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்டோர் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்கு நீதிகிடைக்கச் செய்த தாயுமானவருக்கு மாணவர் அணி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம் - 6
கல்வி உரிமைச் சட்டத்துக்கான நிதியை உடனடியாக ஒதுக்கக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். இதுவரை தமிழ்நாட்டில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை இந்தச் சட்டத்தின்மூலம் பயன்பெற்று வந்தனர்.
ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை விடுவிக்காமல் அடாவடியாகச் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தீர்மானம் - 7
கீழடி அகழாய்வு அறிக்கையை திறுப்பி அனுப்பிய ஒன்றிய அரசுக்குக் கண்டனம்
தமிழர்களின் நகர நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடாமல், தாமதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம் ‘விரைவில் அறிக்கை வெளியிடப்படும்’ என்று சமாளித்துவிட்டு, தற்போது அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி, திருத்தங்களைக் கோரியுள்ளது.
தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதைப் பொறுக்க முடியாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.
தீர்மானம் - 8
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பொற்கிழி கொடுத்து மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துதல்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முதல் ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பொற்கிழி கொடுத்து பாராட்டுவிழா நடத்துவது, மாவட்டந்தோறு திராவிடச் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.
தீர்மானம் - 9
மாணவர் அணி நிர்வாகிகளுக்கு சமூக ஊடகப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது
கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில், மாணவர் அணியின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மண்டலவாரியாக மாவட்ட - மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்களுக்கு தொகுதிவாரியாக சமூக வலைத்தளப் பயிற்சிகள் நடத்தப்படும்.
தீர்மானம் - 10
இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘இல்லந்தோறும் இளைஞரணி’ என இளந்தலைவர் வகுத்த மாடலைப் பின்பற்றி, மாணவர் அணிக்கும் வீடுதோறும் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியிருக்கிறோம். முதற்கட்டமாக இதுவரை 2,00,000 உறுப்பினர்களைச் சேர்ந்துள்ளோம். அதைத் தொடர்ந்து மாவட்ட, மாநகரத் துணை அமைப்பாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கையை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் - 11
உயர்கல்வி, பள்ளி துறை சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம்.
கழகத் தலைவரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா, பெற்றோர்களைக் கொண்டாடுவோம், இல்லம் தேடிக் கல்வி, வாசிப்பு இயக்கம், எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. பதாகைகள், துண்டறிக்கைகள் மூலம் அந்தத் திட்டங்களை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்வதன்மூலம் இளம் தலைமுறைக்குத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் அதைன்மூலம் பயனடைவதற்கான வழிமுறைகளையும் அறியச் செய்ய வேண்டும்.
தீர்மானம் - 12
மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மீட்கும் வகையில் பேரணிகள் நடத்த வேண்டும்
மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள். தலைவரின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மண்டலந்தோறும் Save State Education என்ற முழகத்தை முன்வைத்து மாணவர் அணி சார்பில் பேரணிகளை நடத்த வேண்டும்.
தீர்மானம் - 13
பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்த்து, 100 சதவிகிதம் பள்ளிப்படிப்பைத் தொடரும் மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் மாணவர்கள், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இடை நிற்றலைத் தவிர்க்க கல்வி சார் விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவரணி மூலம் முன்னெடுக்க வேண்டும். பள்ளி மாணவர் சேர்க்கையை க்யூஆர் கோடு மூலம் நடத்தி வரும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் திராவிட மாடல் ஆட்சியில் 100 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை தொடங்கி, அவர்களில் 99 பேர் நடுநிலைப் பள்ளிவரை இடைநில்லாமல் தொடர்வு அதிகரித்துள்ளது. மாணவியரின் கல்வியும் 97.5ல் இருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில் இடைநில்லாமல் படிப்பை தொடரும் மாணவர்களின் அளவும் அதிகரித்துள்ளது. இதை 100 சதவிகிதமாக மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித்துறையோடு சேர்ந்து நாமும் மாணவர்கள், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தீர்மானம் - 14
‘இருநூறு தொகுதிகளில் வெற்றி’ என்ற கழகத் தலைவரின் முழக்கத்தை நிறைவேற்றுவோம்!
கழக அரசின் சாதனைத் திட்டங்களை வீடு வீடாக எடுத்துச்சென்று, அனைவருக்குமான வளர்ச்சி என்பதையும், அனைவருக்குமான அரசை நடந்து வருகிறது என்பதையும் எடுத்துச்சொல்லி... வீண்புரளிகள், பொய்ப் பிரசாரங்கள், கற்பனைக் குற்றச்சாட்டுகள் மூலம் அரசைக் குறைகூறிவரும் எதிர்க்கட்சிகளுக்குத் தக்க பாடம் புகட்ட... 2026 சட்டமன்றத் தேர்தலில், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் கழகத் தலைவர். ‘அந்த இலக்கை நிறைவேற்றி, தமிழகத்தின் தலைநிமிர்வாம், தமிழினத்தின் தலைவராம் நம் தலைவரை... இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவோம்...’ என்று சூளுரைத்துள்ளார் நமது இளந்தலைவர். ‘கழகத் தலைவரின் இலக்கையும், இளந்தலைவரின் சூளுரையையும் நிறைவேற்றியே தீருவோம்’ என்கிற உறுதியேற்று, களத்தில் பணியாற்ற படையாய் திரள்கிறது கழக மாணவர் அணி!
Also Read
-
முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் மு.க.முத்து அவர்களின் உடல் தகனம்.... அரசியல் தலைவர்கள் மரியாதை !
-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி... ரூ.21 கோடி அபராதம், 261 தொழிற்சாலைகள் மூடல்: தமிழ்நாடு அரசு தகவல்!
-
இலங்கை தமிழர்களின் கவனத்துக்கு... திருமணத்தை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு : விவரம் உள்ளே !
-
மீண்டும் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு... பாதிக்கப்படும் பொதுமக்கள்- தவறை சரி செய்யுமா தெற்கு ரயில்வே?
-
”கலைத்துறையில் முத்திரை பதித்தவர் மு.க.முத்து” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி!