Politics
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் செயலை மட்டுமே ஒன்றிய அரசு செய்து வருகிறது- முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (23.05.2025)
உரிமைக்காக மீண்டும் ஒரு வழக்கு
எல்லா உரிமைகளையும் வழக்குப் போட்டு உச்சநீதிமன்றத்தின் மூலமாகத்தான் பெற வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இந்த நாட்டுக்கு ‘ஜனநாயக நாடு’ என்று பெயர். மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் செவிகளுக்கு மக்கள் குரல்கள் விழாது. உச்சநீதிமன்றம் ஓங்கிச் சொன்னால்தான் ‘சில நேரங்களில்’ உறைக்கும். பல நேரங்களில் உச்சநீதிமன்றத்தையும் அவமானப்படுத்துவார்கள்.
“ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான ஆறு சதவீத வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து 2,291 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்துள்ளது. ‘வழக்குப் போடப் போகிறோம்’ என்று மூன்று நாட்களுக்கு முன்புதான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். சொன்னதைச் செய்து விட்டார்கள்.
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை இந்தியாவின் இரண்டாம் இடத்தை நோக்கி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டம் ஏற்கனவே சிறப்பான முறையில் உள்ளது. இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சமமான பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகி வருகிறது.
பள்ளிக் கல்வி சிறப்பாக இருப்பதால்தான், கல்லூரிக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையும் அதிகமாகி வருகிறது. ஆண்டுதோறும் ஏராளமான புதுப்புதுத் திட்டங்கள் கல்வித் துறையில் புகுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மாணவ, மாணவியர் மத்தியில் மிகச்சிறந்த மலர்ச்சியை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பள்ளிக் கல்வித் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உதவிகளைச் செய்ய முன்வந்திருக்க வேண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மாறாக, இந்த வளர்ச்சியைத் தடுக்கும் செயலைத்தான் செய்து வருகிறார்கள்.
ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டம் என்பது பாலர் பள்ளி முதல் 12–ஆம் வகுப்பு வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டம். இத்திட்டம் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துதலையும், நிலையான, தரமான கல்வி வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் தனது நிதிப் பங்களிப்பை இந்தத் திட்டத்துக்காக வழங்குகின்றன.
தமிழகத்தில் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ மற்றும் பி.எம். திட்டத்தைச் செயல்படுத்தாத காரணத்தால், ‘சமக்ர சிக்ஷா’ அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் என்பது வேறு, பி.எம். திட்டம் என்பது வேறு. ஒரு திட்டத்தை இன்னொரு திட்டத்துக்கான நிபந்தனையாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆக்கிவிட்டார். ‘பி.எம். திட்டம்’ என்பது இந்தியை தமிழ்நாட்டுக்குள் திணிக்கும் திட்டமாகும். “இதனை ஏற்க மாட்டோம்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி விட்டார்கள்.
“இதுதான் உங்களது நோக்கமாக இருக்குமானால் 2 ஆயிரம் கோடி அல்ல, 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இப்படி தமிழ்நாடு அரசு சொல்லும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தர்மேந்திர பிரதான். அதன் பிறகு அவர் அமைதியாகி விட்டார். ஆனாலும் நிதியை ஒதுக்கவில்லை. ‘ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்காவிட்டாலும், தமிழ்நாடு அரசு ஒதுக்கும்’ என்றும் முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இதனையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்...
« ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதியைப் பெறுவதற்கான தமிழகத்தின் உரிமையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துவது என்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி, கூட்டாட்சியை அவமதிப்பதாகும்.
« அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறையில் இருந்து விலக வேண்டும் எனவும் ஒன்றிய அரசு தமிழக அரசை கட்டாயப்படுத்தி வருகிறது.
« தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கட்டாயப்படுத்துவது என்பது மாநில சுயாட்சி மற்றும் கட்டமைப்பையும், கல்வி தொடர்பான மாநில அரசின் சட்டங்களையும் தகர்க்கும் செயலாகும்.
« எந்த மொழியையும் எவர் மீதும் கட்டாயப்படுத்தி திணிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
– என்று, அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் தனித்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கல்வி நிதி வழங்காததால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உச்சநீதி மன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை. ஆளுநர் விவகாரத்தில் நெத்தியடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்திலும் அதே மாதிரியான உரிமையை நிலைநாட்டும் என நம்புவோம்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?