Politics

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்! - தொடரும் குழப்பம்!

இந்திய அளவில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளாலும், எதிர்க்கட்சியினர்களாலும் சமூகநீதி, சமத்துவம், ஒற்றுமையுணர்வு, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் முன்னிறுத்தப்படுகின்றன.

ஆனால், அதில் பெரும்பான்மையான (முழுமையான) கோரிக்கைகள் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ கொள்கைக்கு முற்றிலும் எதிராக இருப்பதால், அவற்றை நிறைவேற்றாமல், அதற்கு நேர் - எதிரான சட்டத்திருத்தங்களை கொண்டுவருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

மொழியை திணிக்காதீர்கள் என்றால் இந்தி திணிப்பை கொண்டுவர புதிய கல்விக் கொள்கை; சட்ட - ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்றால் சட்டங்களையே மாற்ற குற்றவியல் சட்டத்திருத்தம்; சிறுபான்மையினர் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றால் சிறுபான்மையினர்களை நாடுகடத்த குடியுரிமை திருத்தச்சட்டம்; மாநில உரிமைகளை உறுதிப்படுத்துங்கள் என்றால் மாநில அதிகாரங்களை பறிப்பதுமாகதான் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இவ்வரிசையில் ஒன்றாகதான், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியபோது, அதற்கு “பிளவுவாதத்தை” கோரிவருகின்றனர் என திரித்து விமர்சித்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.

எனினும், சமூகநீதியை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தாலும், நெருங்கி வரும் பீகார் தேர்தலுக்கு சாதகமான நடவடிக்கை வேண்டும் என்பதாலும், தற்போது தேதி குறிப்பிடப்படாமல், வெறுமென சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சந்திரா அவர்களே, “எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பிரிக்கும் வரையறைக் கொண்டது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.

இவரது கூற்றை, பா.ஜ.க.வின் தலைமையும் கண்டிக்கவில்லை. இதனால், சாதிவாரி கணக்கெடுப்பு உண்மையாகவே நடத்தப்படுமா? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

Also Read: "கடல் வளம் எல்லாம் அதானி, அம்பானிக்கே சொந்தம் என பாஜக நினைக்கிறது" - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் !