Politics

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள்! : விவரம் உள்ளே!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று 05-03-2025), தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த 25.02.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற தமிழ்நாட்டின் நலன் கருதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், இன்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, தொடக்க உரை நிகழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும், முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்ற சூழ்நிலையில், தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, அவ்வாறு குறைக்கப்படும் நிலையில், தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும், பொதுவாக தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமது பிரதிநிதித்துவம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.  

இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை (534) உயர்த்தாமல், தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்படும் என்றும், அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் அவர் தனது உரையில்  குறிப்பிட்டார்.  இன்னொரு முறையில் நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் அதற்கேற்ப பிரித்தாலும், தமிழ்நாட்டிற்கு இழப்புதான் ஏற்படும் என்றும், தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்டால், அங்கு தமிழ்நாட்டினுடைய குரல் எதிரொலிக்காமல் போய்விடும் என்றும் தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமையைச் சார்ந்தது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.  

  தமிழ்நாடு மட்டுமல்ல; தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் ஒன்றிணைக்க முதற்கட்டமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், கட்சி அரசியலை எல்லாம் மறந்து, அரசியலைக் கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.  

பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.  அடுத்து, அரசுத் தலைமைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

பின்னர், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நிலைநிறுத்தும் வகையில் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்ததோடு, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

  • இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான  “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. 

  • நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.   

  • மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

  • தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

  • தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. 

  • இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது. 

  • இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Also Read: அனைத்து கட்சிக் கூட்டம்: “தமிழக பிரதிநிதித்துவத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் பாஜக” - முதலமைச்சர்!