Politics
கச்சத்தீவு பிரச்சினை : தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் பேசுகிறார் ஆளுநர் ரவி : செல்வப்பெருந்தகை !
கச்சத்தீவு பிரச்சினையில் தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் அபத்தமான கருத்துகளை கூறி கச்சத்தீவோடு முடிச்சு போட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூபாயில் 60 லட்சம் அபராதம் விதிப்பதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் பா.ஜ.க. ஆட்சியில் தொடர்கதையாக நடந்து வருகிறது. இப்பிரச்சினையில் தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் அபத்தமான கருத்துகளை கூறி கச்சத்தீவோடு முடிச்சு போட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார். ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை ஆளுநர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின்படி அன்றைக்கு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய எல்லையிலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் இருப்பதால் சர்வதேச கடல் எல்லை வகுக்கிற போது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக மீனவர் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள்.
ஏனெனில் மீன்வளம் என்பது இலங்கை கடல் பகுதியில் இருக்கிறதே தவிர, கச்சத்தீவு பகுதியில் இல்லை. உண்மையிலேயே மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால் கடந்த காலத்தில் டாக்டர் மன்மோகன்சிங் அரசு எடுத்த நடவடிக்கைகளை போல இருநாட்டு மீனவர்களையும் சந்திக்க வைத்து ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை இலங்கை அரசோடும், இலங்கை தமிழ் மீனவர்களோடும் பேசி தமிழக மீனவர்களுக்கு உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதுதான் மீனவர்கள் பிரச்சினையை தீர்க்குமே தவிர, கச்சத்தீவு வழங்கியது குறித்தும், மீட்பது குறித்தும் பேசுவதனால் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நினைத்திருந்தால் 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியிலும், 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன ? 16 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கச்சத்தீவை மீட்க ஒரு துரும்பை கூட எடுத்து போடாதவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தான் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்று திரும்பத் திரும்ப கூறுவது அப்பட்டமான கோயபல்ஸ் பிரச்சாரமாகும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடனே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி 26 ஆகஸ்ட் 2014 தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கச்சத்தீவை மீட்பது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று என்று கூறியதை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் மறுக்க முடியுமா ?
கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கைக்கு எதிராக போரையா தொடுக்க முடியும் ? என்று கேட்டதை எவராலும் மறுத்திட இயலாது. அதேபோல, தந்தி தொலைக்காட்சியில் ரணில் விக்கிரமசிங்கே அளித்த பேட்டியில் கச்சத்தீவு குறித்து இதுவரை இந்திய அரசு எங்களிடம் பேசியதே இல்லை என்று கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சமீபத்தில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது இலங்கை அரசுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதையும், இலங்கை அரசின் கடனை சீரமைக்க இந்தியா மேலும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி கூறினார். இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா ? ஏன் வைக்கவில்லை ? 2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.
எனவே, தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநருக்கோ, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி ஆளுநர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு வரும் ஒன்றிய அமைச்சர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?
-
“சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை என்ன?” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பு : கன்னியாஸ்திரிகள் கைது சம்பவத்திற்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
“இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிவிக்க போவது எப்போது? : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!