Politics

தொகுதிகள் சீரமைப்பு : “உரிமைகளுக்கான பூட்டாட்சியைக் கொண்டு வரும் ஒன்றிய அரசு...” - கி.வீரமணி கண்டனம்!

தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா? சரியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு, மாநில உரிமைகளை மீட்கும் ‘திராவிட மாடல்’ அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது. கூட்டாட்சியல்ல – உரிமைகளுக்கான பூட்டாட்சியைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஒன்றிய அரசின் நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு நடவடிக்கை என்ற ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, நமது தென் மாநிலங்களுக்கும் குறிப்பாக, தமிழ்நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை குறைப்பதற்குமாகத் தீவிரமாக முயற்சி செய்யும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு, தமது கடும் எதிர்ப்பை, கண்டனத்தினைத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ‘திராவிட நாயகன்’ மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபற்றி தமிழ்நாட்டின் உணர்வுகளைப் பதிவு செய்ய, மார்ச் 5 ஆம் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளார்.

=> தமிழ்நாடு முதலமைச்சரின் காலமறிந்த சரியான செயல்!

காலமறிந்து, வருமுன் காக்கும் முன்னுணர்வோடு ஜனநாயக ரீதியில், முதல் நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சரின் செயல் வேகத்தினை வரவேற்கிறோம். ‘தென் மாநிலங்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி’ என்று பொருத்தமாக குறிப்பிட்டுள்ளார் நமது முதலமைச்சர்.

உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா போன்ற வட மாநிலங்களில் தொகுதிகளைக் கூடுதலாகப் பெருக்கிடவும் கருத்து கருக்கொண்டு, திட்டம் உருவாக்கப்பட்டு, எந்த நேரத்திலும் அதனை செயல்படுத்தக் கூடும் என்ற அச்சம் பரலவாக இருக்கும் இந்நேரத்தில், உடனடியாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்துவது தலைசிறந்த ஜனநாயக அணுகுமுறையாகும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயகத்தைச் சிதைத்து, நமது அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் ஒருபுறத்தில் எடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் அதனுடைய அடிக்கட்டுமானத்தையே சீர்குலைக்கும் பணிகளை திரை மறைவில் உள்ள ஒரு திட்டமாகவே பல திட்டங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் செய்து வருகின்றது – ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி பிரதமர் மோடி தலைமையில்!

=> ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற சூழ்ச்சித் திட்டங்கள்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற ஒரு சூழ்ச்சித் திட்டத்தினை அமல்படுத்தி, அதன்மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடை கொடுத்துவிட்டு, ஒற்றை ஆட்சியை (Unitary State) ஆக்கிடச் செய்யும் முயற்சி.

ஓய்வு பெற்ற நீதிபதிகள்கூட இது உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், செல்லுபடியாகாது என்று அறிவிக்க முழுத் தகுதி உள்ள சட்டம் என்று எச்சரிக்கை மணியை அடித்தாலும், மூர்க்கத்தனமாக மேலும் முன்னெடுத்துச் செயல்படுத்தி எதேச்சதிகார ஆட்சிக்கு அடிக்கல் நாட்டும் பணிகள் ஒருபுறம் வேகமாக நடைபெறும் நிலையில், தொகுதி சீரமைப்பு என்ற போர்வைமூலம், யதேச்சதிகார, ஜனநாயக விரோத ஒன்றிய ஆட்சி அரசமைப்புச் சட்டத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் முயற்சியைத் தீவிரமாகச் செய்து வருகிறது!

தமிழ்நாட்டின் சாதனை பொங்கும் ஆளுமையை நியாயமாக ஒன்றிய அரசு பாராட்டி மகிழ்ந்து உற்சாகப்படுத்தவேண்டும்.

மாறாக, மிக்க வன்மத்துடன், எப்படியெல்லாம் நிதி மறுப்பின்மூலம் தமிழ்நாட்டிற்குச் சிக்கலை – நெருக்கடியை உண்டாக்கலாம் என்றல்லவா முயற்சிக்கிறது. என்னே கொடுமை! எவ்வளவு அநீதி! எடுத்துக்காட்டாக, மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது ஒன்றிய அரசுகள் தொடர்ந்து வற்புறுத்தும் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்!

=> குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தினால் தண்டனையா?

தமிழ்நாடு அரசில், இது ஆட்சி திட்டமாகும் முன்பே, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்மூலம் ஒவ்வொரு திருமண விழாவிலும் பேசப்பட்டு, குடும்பக் கட்டுப்பாடு நடைமுறையில் செயல்படுத்தப்படுவதனால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டால், தமிழ்நாடு மாநிலம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

அதனை பாராட்டுவதற்குப் பதில், தண்டிப்பதுபோன்று, நாடாளுமன்றத்தி்ல், சட்டமன்றத்தில் ஜனநாயகக் குரல் வளையை, கருத்துச் சுதந்திரத்தினைத் தடுக்கும் வகையில், நமது மாநில உரிமைகள் கூட்டாட்சித் தத்துவம், சம வாய்ப்புக்கு எதிரான நிலைப்பாடாக ஹிந்தி நாடாக மாற்றிட இப்படி தொகுதி சீரமைப்பு என்ற ஒரு சூழ்ச்சி ஆயுதம் மூலம், மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமைப் பறிப்பைச் செய்ய மும்முரமாக முனையும் நிலையில், சரியான நேரத்தில், சரியான முடிவினை நமது முதலமைச்சர் எடுத்துள்ளார்.

=> வாதாடவும், போராடவும் தயங்காத ‘திராவிட மாடல்’ அரசின் அணுகுமுறை!

அனைத்துக் கட்சிகளை அழைத்து, கருத்துக் கேட்டு, உணர்வுகளை உரிய வகையில் தெரியப்படுத்தும் இந்த முயற்சி, பாதை தவறிடும் ஒன்றிய அரசினை சிந்திக்க வைத்து, இதுபோன்ற சூழ்ச்சிப் பொறியினைக் கைவிடவேண்டும் என்பதற்கான மக்களாட்சி முறையே இது! முதலில் வாதாடவும், பிறகு போராடவும் தயங்காத அணுகுமுறையே ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நடைமுறையாகும்.

இப்பிரச்சினை மக்கள் உரிமைப் பிரச்சினை; வெறும் கட்சிப் பிரச்சினையல்ல!

சூழ்ச்சிகளைத் தவிடு பொடியாக்கிட, முன்னோக்குடன் செயல்படும் முதலமைச்சரின் முயற்சிக்குப் பேராதரவினை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும், ‘‘கூட்டாட்சி அல்ல – உரிமைக்கான பூட்டாட்சி’’ என்று நடத்திட உத்தேசிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த ஒன்றிணையவேண்டும்.

இது அவசரம், அவசியம்!

விழித்திடுவீர்! ஒன்றுபடுவீர்!!

Also Read: ”மக்களைக் காக்கக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!