Politics
“மும்மொழிக்கு இடமேயில்லை!” : தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் - விவரம் உள்ளே!
தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 24.02.2025 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் - 1
கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் - தயாளு அம்மையாரின் மூன்றாவது மகவாகத் தோன்றி, தாயிற் சிறந்த கோயிலுமில்லை - தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனும் கூற்றுக்கு ஏற்ப இளம் பருவத்திலேயே ஏழை எளியோருக்கு உதவிடும் நோக்கில், தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, படிப்படியாக கல்வியிலும், பொது வாழ்விலும் தம்மை உயர்த்திக் கொண்டு, இன்று உலகமே வியந்து போற்றுகின்ற முதலமைச்சராகவும், பவள விழா கண்ட தி.மு.கழகத்தின் தலைவராகவும் திகழ்ந்து, சநாதன சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, திராவிடத்தையும், தமிழையும், தமிழர்களையும் பாதுகாவல் அரணாகத் திகழ்ந்து வரும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மனிதநேய விழாவாக தமிழ் கூறும் நல்லுலகம் 01.03.2025 அன்று கொண்டாவிருக்கிறது.
தீர்மானம் – 2
வரலாற்று சிறப்புமிக்க தி.மு.க. சட்டத்துறை 3வது மாநில மாநாட்டில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றிய கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!
கடந்த ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாட்டில் பங்கேற்று எழுச்சி உரையாற்றிய கழக தலைவர் அவர்களுக்கும், மாநாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பி சிறப்பு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும், பங்கேற்று சிறப்பித்த அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும், மேலும் இம் மாநாடு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றமைக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கழக வழக்கறிஞர்கள் ஆகிய அனைவருக்கும் இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 3
பேரறிஞர் அண்ணா வழங்கிய இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் என்றென்றும் நீடிக்கும் - மும்மொழிக்கு இடமேயில்லை!
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர், தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வப்போது, தி.மு.கழகம் மேற்கொண்ட பல்வேறு வகையானப் போராட்டங்களால், இந்தித் திணிப்பை ஒத்திவைப்பது, சால்ஜாப்பு கூறுவது என்று ஒன்றிய அரசு கேலியும் கிண்டலும் செய்து வருகிறது.
1965ஆம் ஆண்டு மொழிப் போரைக் கண்ட தி.மு.கழகம், 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், இனி இரு மொழிக் கொள்கைதான் என்று முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வெட்டு ஒன்று - துண்டு இரண்டென அறிவித்த காலத்திலிருந்து, தமிழர்கள் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், எக்காரணத்தைக் கொண்டும், இந்திக்கு இங்கே இடமில்லை என்று தெள்ளத் தெளிவுற அறிவித்த பின்னரும், புதிய தேசிய கல்விக் கொள்கை, யுஜிசி வரைவுக் கொள்கை, தமிழ்நாட்டிற்கு நிதியைத் தராமல் கல்வியைச் சிதைக்கும் பஞ்சமாபாதகம், அன்னைத் தமிழ் மொழியை இரண்டாந்தரமாக்கிடும் ஈனச் செயல் போன்றவற்றை திரும்பத் திரும்ப வலியுறுத்தி, பத்திரிகை, ஊடகங்கள் மூலம் மிரட்டல் விடுத்துவரும் ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் அனைவரது மும்மொழிக் கொள்கைப் பொய் பிரச்சாரங்கள் அனைத்தும் முனை மழுங்கச் செய்திடும் வகையில், கழக சட்டத்துறை தமது பதிலடியை விரைந்தும், விவேகத்துடனும் செயல்படுத்திட, நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்குகள், தெருமுனைப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்றும், சட்டத்துறையின் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் - 4
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த ஒன்றிய அரசுக்கு கண்டனம்!
சமீபத்திய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காமலும், குறிப்பாக தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்த ஒரே காரணத்திற்காக
சமீபத்திய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காமலும், குறிப்பாக தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறாமல், தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 5
வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவை முற்றிலுமாகத் திரும்பப் பெற பாசிச பாஜக அரசை வலியுறுத்துகிறோம்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வழக்கறிஞர் (திருத்த) சட்ட முன் வரைவு 2025 என்பது, பார் கவுன்சில்களின் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, சட்டத் தொழிலின் சுதந்திரத்தைப் பறித்து, நீதித்துறையின் சுதந்திரத்தை சங்பரிவார்களின் இந்துத்வா வழிமுறையில் நாட்டின் வழக்குரைஞர்களின் குரல் வளையை நெறிப்பதாகும்.
வழக்குரைஞர், சட்டம், நீதி, நீதிமன்றங்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைத்திடும் நோக்கில், ஒவ்வொரு நாளும் கோணங்கித் தனமான முன் வரைவுகளை கொண்டு வரும், பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசு, சட்டத் தொழிலின் தன்னாட்சியை மதிக்கும் வரையில், சட்ட வரைவு - 2024ஐ முற்றிலுமாகத் திரும்பப் பெறுமாறு கழக சட்டத்துறையின் இக்கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறது.
இந்த சட்ட முன்வடிவை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கருத்தை தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 6
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியாயமாக தரவேண்டிய நிதியினை உடனே வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியாயமாக தரவேண்டிய GST பங்கு தொகை, பேரிடர் கால நிவாரண நிதி, கல்வி நிதி உள்ளிட்ட நிதியினை உடனே வழங்க வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் - 7
தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கி தமிழ்மொழியை புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்!
தமிழ் மொழியின் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் ஒன்றிய பிரதமர் சில ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு ரூ 1800/- கோடி நிதி ஒதுக்கியும், எட்டு கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு வெறும் ரூ 74/- கோடி நிதி ஒதுக்கி பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய பிரதமரின் இச்செயலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்றும் , இதுபோல் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும், மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் ஒன்றிய பிரதமருக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 8
1000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” திட்டம் வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையின் போது, “குறைந்த விலையில் மருத்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
சொன்னதைச் செய்யும் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் 1000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” 24.02,2025 திங்களன்று திறந்து வைத்து ஏழை - எளிய மக்கள் பயனடையும் வகையில் சாதனை புரிந்துள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டம் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 9
2026 சட்டமன்றத் தேர்தல் பணிக்காக கழக வழக்கறிஞர்களுக்கு பயிற்சி பாசறை!
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கழக மாவட்டங்கள் தோறும் வழக்கறிஞர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பு எடுத்து வழக்கறிஞர்களை தயார்படுத்தும் பணியை விரைவில் துவங்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!