Politics

UGC-யின் விதிகள் : மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி: தி இந்து தலையங்கம் குற்றச்சாட்டு!

தென் மாநிலங்களின் சிரமங்களும், யுஜிசி வரைவு விதிமுறைகளும் என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ஒன்றிய அரசு பிறப்பிக்கும் சட்டங்கள் மாநிலங்களின் முழுமையான சட்டங்களை மீறக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான வரைவு விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான யுஜிசி-யின் காலக்கெடு நெருங்கும் நிலையில் பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள், தங்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது.

அண்மையில், திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டதும், அதில், யுஜிசி-யின் புதிய விதிகள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கும், மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைப் பலவீனப்படுத்தும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் இந்த தலையங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், தமிழ்நாடு, கேரளாவின் ஆளும் கட்சிகளுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சில மாநிலக் கட்சிகளும் யுஜிசி-யின் புதிய விதிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தி உள்ளதாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நியமிப்பதிலும் யுஜிசி-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதிகள் கவலையளிப்பதாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் பல்கலைக்கழகங்களின் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்யும் என்ற யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமாரின் வாதத்தை ஏற்க மறுக்கும் மாநில அரசுகள், இது ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு என குற்றம்சாட்டுவதாகவும், இதனால் பல மாநில பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தி இந்து தலையங்கம் விமர்சித்துள்ளது.

யுஜிசி-யின் புதிய விதிகள் கல்வித் தரத்தை நீர்த்துப்போகச் செய்யும், வணிகமயமாக்கல் மற்றும் அரசியல்மயமாக்கலை அதிகரிக்கும், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை குறைக்கும் என்ற குற்றச்சாட்டுகளுடன், உயர்கல்விக்கான பெரும்பாலான செலவுகளை மாநில அரசுகள் ஏற்கும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை ஏன் பறிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளதையும் தி இந்து தலையங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், உயர்கல்வி விவகாரம் மட்டுமின்றி, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை இந்த புதிய விதிகள் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள துறைகள் உருவாக்கும் விதிகள் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முழுமையான சட்ட விதிகளை மீற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாட பல மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன என்றும், மாநில அரசுகளின் குரல்களை யுஜிசி புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள தி இந்து தலையங்கம், புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன்பு அதன் வரைவு அறிக்கையில் உள்ள கூட்டாட்சிக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

Also Read: அமெரிக்க நிதி உதவியுடன் காங்கிரஸ் அரசை கவிழ்த்ததா பாஜக ? - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு !