Politics

“இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும்” : முதலமைச்சரின் அறிவிப்பை வழிமொழிந்த கனிமொழி எம்பி!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து, காணொளி வாயிலாக கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அப்போது விழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது! இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ஆம் ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புனே நகரில் இருக்கும் பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் – மாதிரிகள், பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டிருக்கிறது” என சான்றுகளுடன் வழி மொழிந்துள்ளார்.

இதனை வழிமொழிந்து தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, “இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந்தாது உதிர.

(நற்றினை 249: 1-4)

‘இரும்பின் வலிமையை ஒத்தது புன்னைமரம்’ என்கிறது எட்டுத்தொகையில் முதல்நூலான நற்றிணை. உலக வரலாற்றிலும், நாகரிகங்களின் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது இரும்பின் பயன்பாடு. நமது இலக்கியங்கள் எடுத்தியம்புவது போல், தமிழ் நிலத்திலிருந்தே இரும்பின் காலம் தொடங்கியதாக நிறுவும் புதிய ஆதாரங்களை அறிவியல்பூர்வமாக உலகிற்கு வழங்கியுள்ள மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது” என பெருமிதம் கொண்டுள்ளார்.

கனிமொழி அவர்களை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி, “5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.

இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read: மாட்டு கோமியத்தை அமிர்த நீர் என்ற டாக்டர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : மருத்துவர்கள் புகார் !