Politics

முன்னேறி வரும் அருந்ததியினர் சமூகத்தினர் : திராவிட இயக்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது - முரசொலி பெருமிதம் !

முரசொலி தலையங்கம் (21-01-2025)

அருந்ததியருக்கு ஒளிவிளக்கு !

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு -அன்றைய துணை முதலமைச்சர் - இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அருந்ததியினர் உள் ஒதுக்கீடுச் சட்டமானது அருந்ததியினர் இன மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காகத் திகழ்கிறது என்பதை 'தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறது.

அருந்ததியினர்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கியது. இதன் மூலமாக கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியினர் இன மக்கள் எந்தளவுக்கு முன்னேறி வருகிறார்கள் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களைப் பெற்று ‘தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

*2018-19 கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் அருந்ததியினர் இன மாணவர்கள் 107 பேர் சேர்ந்துள்ளார்கள் என்றும் 2023-24 கல்வியாண்டில் 193 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*2009 ஆம் ஆண்டு அருந்ததியினர் இன மாணவர்களில் 193 பேர் தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்றும், ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 944 ஆக உயர்ந்து விட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக அருந்ததியினர் இன மக்களின் சமூக மேம்பாடு அதிகரித்துள்ளதாக ‘தி இந்து' ஆங்கில நாளேடு கூறி உள்ளது.

“ பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு செயல்படுகிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதிக்கான இலட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல்" என்று பெருமிதத்துடன் சொல்லிஇருக்கிறார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன். அதைத் தான் உறுதி செய்துள்ளது 'தி இந்து'.

“தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து தரவுகளைத் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால் தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது வரலாறு" என்றும் பாராட்டி உள்ளது.

தலைவர் கலைஞரின் தொலை நோக்குப் பார்வைக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் இது. அருந்ததியினர் இன மக்களின் நிலை குறித்து ஆராய நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஆணையம் அமைத்தார் முதலமைச்சர் கலைஞர். அவர் அளித்த பரிந்துரைப்படி தமிழ்நாடு அருந்ததியர் சட்டம் - 2009 என்ற புதிய சட்டத்தை 26.2.2009 அன்று நிறைவேற்றினார் முதலமைச்சர் கலைஞர். முதுகில் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முதலமைச்சர் கலைஞர். எனவே, அன்றைய துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்தார். இதன் காரணமாக அருந்ததியர் சமுதாய மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை அதிகம் பெற்றார்கள். இத்தகைய சட்டத்தை முறையாகக் கொண்டு வந்து நிறை வேற்றினார் தலைவர் கலைஞர் அவர்கள். அதில் தான் இதன் வெற்றி அமைந்துள்ளது.

23.1.2008 அன்று, 'சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியினர் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தனியாக உள்ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது’ என தி.மு.க. அரசு அறிவித்தது. இது பற்றி ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் கலைஞர். இக்கூட்டத்தின் முடிவுப்படி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார் முதல்வர் கலைஞர். 22.11.2003 அன்று நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் அறிக்கையை அளித்தது. 27.11.2008 - ஆணையத்தின் அறிக்கையை தி.மு.க. அமைச்சரவை ஆலோசனை செய்து ஏற்றுக் கொண்டது.

26.2.2009 அன்று அருந்ததியர் மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவை அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல்செய்தார். அன்றைய தினமே ஏகமனதாக நிறைவேறியது. 12.3.2009 - அறிவிக்கை வெளியானது. 29.4.2009 - அருந்ததியினர் சமுதாயத்திற்கான உள் ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அன்றைய தினம் உடல்நலமில்லாமல் இருந்தார் முதல்வர் கலைஞர். அவரால் சட்டமன்றத்துக்கு வர முடியாத சூழல். உரையைத் தயாரித்து அன்றைய துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைத்தார் கலைஞர். இதுதான் அருந்ததியினர் இன மக்கள் மீது தி.மு.க. அரசு வைத்த உண்மையான அன்பாகும்.

தலைவர் கலைஞரின் துல்லியமான செயல்பாடு காரணமாகத்தான், ‘பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு' என்று 2024 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த அமர்வு என்பது ஏழு நீதிபதிகளைக் கொண்ட பெரிய அமர்வு. தலைவர் கலைஞரின் சட்ட அறிவுக்கும் சாட்சியாக இந்த சட்டம் அமைந்தது. அருந்தியின மக்களின் நன்மைக்காகச் செயலாற்றும் 45 அமைப்பினர் அண்ணா அறிவாலயம் வந்து முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.

7.6.1971 - இல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 16 சதவீத இடஒதுக்கீட்டை 18 சதவீதமாக உயர்த்தினார் முதல்வர் கலைஞர். பின்னர் 1990 ஆம் ஆண்டு அந்த 18 சதவீதத்தையும் முழுமையாகப் பட்டியலின மக்களுக்கே உரித்தானதாக ஆக்கி, தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீட்டை பழங்குடியின மக்களுக்கு தனியாக அளித்தார். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 69 சதவிகிதம் ஆனது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியவரும் முதல்வர் கலைஞரே! அந்த அடிப்படையில் 1970 முதல் இன்று வரையில் அனைத்துத் தரப்பினரின் கல்வி, வேலை உரிமையை வழங்கியவராக நிமிர்ந்து நிற்கிறார் கலைஞர். உயர்ந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி காலத்து வகுப்புவாரி உரிமைச் சட்டம் முதல் இன்றைய சட்டங்கள் வரை சமூகநீதியை நிலைநாட்டி வரும் இயக்கமாக திராவிட இயக்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

Also Read: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் : ஒரே ஆண்டில் 12.80 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு - திராவிட மாடல் அரசு சாதனை!