Politics

பொங்கல் புறக்கணிப்பு... வடஇந்திய பண்டிகைகளுக்கு வாழ்த்து - தமிழுக்கு தொடர் அவமரியாதை செய்யும் ஆளுநர் ரவி!

தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டும் நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் கலந்துகொண்டு ஆளுநர் உரையினை வாசிப்பார். ஆனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் உரையை புறக்கணித்தார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது தமிழர் திருவிழாவான பொங்கலுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் வட இந்திய பண்டிகைகளுக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கத்தில், லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு மற்றும் உத்தராயணத்தின் விசேஷமிக்க நாளில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்!அறுவடை காலத்தைக் குறிக்கும் இந்த பண்டிகைகள், அன்னை பூமிக்கான நமது ஆழ்ந்த நன்றியுணர்வை பிரதிபலிக்கின்றன. "

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வளமான மரபுகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், ஒரே தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் கலாசார துடிப்பு மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்த்து, அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கட்டும்"என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்ந்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த நிலையில், தற்போது பொங்கல் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது தமிழ் மீதம் தமிழ் பாரம்பரியத்தின் மீதும் அவருக்கு இருக்கும் அவமரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.