Politics

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !

அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார்.எனவே அவரை நீக்க ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், "அரசு தயாரித்து கொடுக்கும் ஆளுநர் உரையில் பல பகுதிகளைப் படிக்க மறுக்கிறார். 2024 ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல், சட்டம் ஒருங்கு சிறப்பாக உள்ளது போன்ற வார்த்தைகளை படிக்க மறுத்துள்ளார்.இந்த ஆண்டு ஆளுநர் உரையை படிக்காமலேயே சட்டப் பேரவையில் இருந்து வெளியேறி உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு "இவ்வாறு வெளியேறியது என்பது சட்டப்பேரவையை அவமதிப்பதாகும். ஜனநாயக செயல்பாட்டுக்கு எதிரானதாகும். ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அவ்வாறு செயல்படவில்லை. மாநில அரசின் திட்டங்கள் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்" என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Also Read: பெரியாரை விமர்சிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி - திருமாவளவன் விமர்சனம் !