Politics

மாநிலங்களால் வேண்டாம் எனும் பதவிக்கு கூடுதல் அதிகாரங்கள் : ஆளுநர் பதவியின் வழி ஒன்றிய அரசு வஞ்சகம்!

இந்தியாவின் ஒன்றிய முறையை சிதைக்கும் வகையிலும், மாநிலங்கள் எந்நிலையிலும் தன்னாட்சி பெற்றிட கூடாது என்ற நோக்கத்துடனும் ஆளுநர் பதவியை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதனடிப்படையில், மாநிலங்களின் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் வேந்தர் என்ற பொறுப்பை ஆளுநருக்கு தருவதும், சட்டப்பேரவையில் எது நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பதுமான நடைமுறைகள் பின்பற்று வருகின்றன.

இந்நடைமுறைகள் மக்களுக்கானதாக இல்லாமல், ஒன்றிய அரசின் அதிகாரத்துவத்திற்கானதாக அமைந்துள்ளது என மக்களாலும், மாநில அரசுகளாலும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அதனை புறக்கணித்து ஆளுநருக்கு கூடுதல் வலு சேர்த்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதற்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட UGC வரைவு நெறிமுறைகளும் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள UGC வரைவு நெறிமுறைகளின் படி, கல்வித்துறை சாராத தொழில் துறை நிபுணர்கள், பொதுத்துறை சார்ந்தவர்கள் போன்றவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில் UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணை வேந்தர்களாக கல்வித்துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களை மட்டுமே நியமிக்கும் நடைமுறையை மாற்றி UGC நெறிமுறைகளை வெளியிட்டுள்ள இச்செயல் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

Also Read: ஆளுநரின் முரண்பாடுகள் : தி.மு.க சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!