Politics
உண்மை தன்மையை மறைக்க தேர்தல் நடத்தை விதியையே மாற்றிய ஒன்றிய பா.ஜ.க அரசு! : மக்களாட்சிக்கு ஆபத்தா?
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அறியப்படும் இந்திய துணைக் கண்டம், தனது மக்களாட்சி தன்மையை முழுமையாக செயல்படுத்துகிறதா என்றால், அதற்கு இல்லை என்ற அழுத்தமான விடையை அளித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
தேர்தல்கள் நடத்தும் முறையில் மாற்றம், சட்டங்களை செயலாக்குவதில் மாற்றம், நாடாளுமன்றத்தின் நடைமுறையில் மாற்றம் என இந்திய நாட்டின் மக்களாட்சி தன்மையை மாற்றி, முதலாளித்துவ நாடாக இந்தியாவை மாற்றி வருகிறது ஒன்றிய அரசு.
அதற்கு, பா.ஜ.க முன்னெடுக்கும் முறைகேடு நடவடிக்கைகள் முக்கிய எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன. வெளிப்படை தன்மையை நிலைநிறுத்துவோம் என 2014-ல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை உரிமைகளை சூறையாடிய பெருமை பா.ஜ.க.வினுடையது.
அதில் தவிர்க்க முடியாத உரிமை பறிப்பு நடவடிக்கைகளாக தேர்தல் நடைமுறைகளில் முன்மொழியப்பட்டிருக்கும் மாற்றங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், முதன்மை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் நியமனக் குழு குறித்த மசோதா ஒன்றை முன்மொழிந்து, அதனை எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க.
அம்மசோதாவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை தேர்தல் அதிகாரி மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில் இதுவரை இடம்பெற்று வந்த, அரசியல் சார்பற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்க வேண்டும் என்ற வரையறை இடம்பெற்றது.
இதற்கு இந்திய அளவில் மக்களாட்சியை நிலைநிறுத்தும் பேராளுமைகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம், அரசியல் சார்பற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தேர்தல் ஆணைய முதன்மை அதிகாரியை நியமிக்கும் குழுவில் இடம்பெறவில்லை என்றால், குடியரசுத் தலைவர் பதவியை போல, ஒன்றியத்தில் ஆட்சி கொண்டிருக்கும் கட்சி முன்னிறுத்தும் நபர் தான் இந்திய முதன்மை தேர்தல் அதிகாரியாகவும் பதவி வகிப்பார்.
இதனால், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு சார்பு நடவடிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற நிலை இருப்பது தான். ஆகையால், இன்றளவும் இந்திய முதன்மை தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறைவேற்றம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மசோதா முழுமையான சட்டமாவதற்கு முன்பே, தேர்தல் ஆணையம் ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு சாதகமான பல நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது. அதற்கு 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாக்கு இயந்திரங்களை விளையாட்டுப் பொருட்களாக கையாண்டதும், சிறுபான்மையினருக்கு வாக்குரிமை வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டதுமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கெடுப்பின் போது, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பூஜை, கள்ளவாக்குகள், சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் பா.ஜ.க.வினர் இடைமறித்தது உள்ளிட்ட நிகழ்வுகள் மக்களாட்சிக்கு இழைக்கப்படும் அநீதிக்கு கூடுதல் வலு சேர்க்கும் நடவடிக்கைகளாக அமைந்தன.
இந்த சூழலில், அண்மையில் நடந்து முடிந்த அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக தேர்தலில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது பா.ஜ.க. இதனால், பல கேள்விகளுக்கு உள்ளான மக்கள் தகவல் அறியும் சட்டத்தின் (RTI) வழி, அரியானா வாக்குச்சாவடிகளில் பதிவாகிய சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் கோரினர்.
அப்போது, மக்களின் கேள்விகளுக்கு விடையளிக்காமல், தேர்தல் நடத்தை விதியை 93(2)(a) மாற்றி, தேர்தல் குறித்த அனைத்து ஆதாரங்களையும் வெளியிட முடியாது என மறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது பா.ஜ.க.
இதனால், தேர்தல் முறையின் வெளிப்படைத் தன்மையும், நியாயமான தேர்தல் முறை நிகழ்கிறதா என்ற கேள்வியும் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!