Politics

பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு எதிராக போராடிய அமைப்புதான் RSS -அம்பலப்படுத்திய முரசொலி !

முரசொலி தலையங்கம் (21-12-2024)

அம்பேத்கரை உச்சரிக்க அருகதை உண்டா ?

‘அண்ணல் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, புறக்கணித்தது’ என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்கிறார்களே, இவர்களுக்கு அம்பேத்கரை உச்சரிக்க அருகதை உண்டா?

2014 ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் லாபங்களுக்காக அம்பேத்கரை உச்சரித்தார்களே தவிர, அதற்கு முன்னதாக அண்ணலுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்புகள் இருந்தது?

2017 ஆம் ஆண்டு அம்பேத்கரின் பேரன் ஆனந்த் தெல்தும்டேவைக் கைது செய்தது பா.ஜ.க. அரசு அல்லவா?

அண்ணலைக் கொச்சைப்படுத்தி அருண்சோரி புத்தகம் எழுதிய போது இவர்கள் எங்கே போனார்கள்? Worshipping False Gods - – Ambedkar, and the facts which have been Erased - – என்பது அருண்சோரி எழுதிய நூல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனையாளர் குழுவில் இருந்தவர் இவர். பா.ஜ.க. அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். “பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாளராக இருந்த அம்பேத்கர், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை” என்று அதில் அருண்சோரி எழுதினார். இந்த நூலுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புகள் வந்த போது, இப்புத்தகத்திற்குத் தடை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. அதைத் தடை செய்யக் கூடாது என்று சொன்னவர்கள் ஆர்.எஸ்.எஸ். - – பா.ஜ.க. ஆட்கள்.

‘இராமனும் கிருஷ்ணனும் ஓர் புதிர்’ என்பது அம்பேத்கர் எழுதிய நூல் ஆகும். அந்த நூலைத் தீக்கிரையாக்கி அதனைத் தடை செய்ய வேண்டும் என்று போராடியது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அமைப்பினர்தான் என்பது மறந்து போய்விட்டதா?

மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு எதிராக 1994 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் போராடியவர்களில் அதிகம் இவர்கள்தானே என்பதை மறக்க முடியுமா? அம்பேத்கரின் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டனவே? தலித் மக்கள் தாக்கப்பட்டார்களே?

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் வகுப்பினர் 1980 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் அம்பேத்கர் சிலைகள்தான் சேதப்படுத்தப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக சுதர்சன் பொறுப்பேற்ற போது, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு விரோதமானது. மேற்கத்தியக் கொள்கைகளின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டது. ஆகையால் நாம் அதை புறந்தள்ளிவிட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத வேண்டும்” என்று சொன்னார். அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயல் அல்லவா இது?

சமூக நீதியை உருவாக்க ‘சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய’ மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமானது 1951 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. இதனைச் செயல்படுத்திக் கொடுத்தவர் அன்றைய பிரதமர் நேரு அவர்கள். ஆனால், ‘பொருளாதார அளவுகோல் வேண்டும்’ என்று அப்போது சொன்னவர் இந்து மகாசபை உறுப்பினரான சியாம பிரசாத் முகர்ஜி. இந்தத் திருத்தத்தை பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும் நிராகரித்தார்கள். இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னவர் சியாம பிரசாத் முகர்ஜி. இவரது திருத்தத்துக்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே இந்திய நாடாளுமன்றத்தில் கிடைத்தது.

பட்டியலினத்தவருக்கு பத்து ஆண்டுகள் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அப்படிச் செய்தால்தான் அவர்கள் மட்டுமே சலுகைகள் அனுபவிக்கிறார்கள் என்று மற்றவர்களுக்கு இருக்கும் உறுத்தல் பறந்து போகும் - என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்க்கர்.

சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரானவர்களாக இவர்கள் இருந்ததால்தான் மண்டல் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை 7.8.1990 அன்று பிரதமர் வி.பி.சிங் வெளியிட்டார். அப்போது டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போதைய பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதில் கலந்து கொண்டார். அன்றைய தேசிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து பா.ஜ.க. ஆதரவு தெரிவித்து வந்தது. அந்த ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

‘மண்டல்’–ஐ வைத்து பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தால் பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்பு வந்துவிடும் என்பதால் ராமர் கோவில் கட்ட யாத்திரை கிளம்பினார்கள். இதுதொடர்பான பா.ஜ.க.வின் தேசியக் குழுக் கூட்டத்தில் (1990 செப்டம்பர் 14) வி.எச்.பி.தலைவர் அசோக் சிங்கால் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டார்.

அத்வானியின் ரத யாத்திரை

மண்டல் தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வந்தது. கோவில் பிரச்சினையை செப்டம்பர் மாதம் கிளப்பினார்கள். “அத்வானியின் ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது” என்றார் பிரதமர் வி.பி.சிங். அத்வானியின் ரத யாத்திரை பீகாருக்குள் நுழைந்ததும் அதனைத் தடை செய்து அத்வானியைக் கைது செய்தார் அன்றைய பீகார் மாநில முதலமைச்சர் லாலு பிரசாத். ( இன்று வரை லாலு பிரசாத், பா.ஜ.க. தலைமையால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது இதனால்தான்) இதற்காகத்தான் காத்திருந்தது பா.ஜ.க. உடனடியாக பிரதமர் வி.பி.சிங் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. நவம்பர் 7 ஆம் நாள் பதவி விலகினார் வி.பி.சிங்.

ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட சமூகநீதியை, நவம்பர் மாதத்தில் நாசம் செய்தவர்கள்தான் இன்றைக்கு சமூகநீதியைப் பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் பேசுகிறார்கள்.

இதன் காரணமாக உயர்ஜாதி -– உயர் வர்க்க கட்சி என்ற அடையாளம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது. அதனைத் துடைக்க மெதுவாக அம்பேத்கரைச் சொல்லத் தொடங்கினார்கள். அம்பேத்கரை நீண்ட காலத்துக்கு எதிர்க்க முடியாது என்ற நிலைமை வந்ததும், அம்பேத்கரை கபளீகரம் செய்ய பா.ஜ.க. முயற்சித்தது. பட்டியலினத்தவரை ஈர்க்கும் தந்திரமாகவும் பயன்படுத்தினார்கள். ‘இந்துத்துவ’ அம்பேத்கராக அவரைக் காட்ட முயற்சித்தார்கள். அவருக்கு காவிச் சாயம் பூச முயற்சித்தார்கள்.

‘படேலுக்கு எதிரானது காங்கிரஸ், அம்பேத்கருக்கு எதிரானது காங்கிரஸ்’ என்று புனைவு வரலாறுகளின் மூலமாக நிகழ்கால உண்மைகளை மறைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்லவா பா.ஜ.க.?

Also Read: ”புழுத்துப்போன பொய்யை வழக்கம் போல பாடத் தொடங்கிய கோட்டைச்சாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி !