Politics

அதானியை காப்பாற்ற, அம்பேத்கரை அவமதித்த பா.ஜ.க.! : காங்கிரஸ் கட்சி கண்டனம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி 20 நாட்களை கடந்த நிலையிலும், ஆக்கப்பூர்வமான விவாதமோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கையோ எவையும் அவையில் இடம்பெறவில்லை.

குறிப்பாக, அதானியின் முறைகேடு விவகாரங்கள் உலகையே ஆட்கொண்டிருக்கும் வேளையிலும், அது குறித்து கவலை கொள்ளாது முதலாளித்துவ நோக்குடன் அதானியை காப்பாற்றவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை கண்டறிந்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாட்டில் அரங்கேறும் முறைகேடுகள் குறித்தும், அநீதிகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என வலியுறுத்திய நிலையிலும் அதனை திசை திருப்பி, தனக்கான பணிகளை செய்வதில் மட்டுமே தீவிரம் காட்டி வருகிறது பா.ஜ.க.

அவ்வாறான ஒரு நடவடிக்கையாக தான், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பாக பேசியதும் பார்க்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பாக பேசினால், சமூக நீதியை தாங்கிப்பிடிப்பவர்களால் பொறுத்துக்கொள்ள இயலாது என உணர்ந்து, அதுபோன்ற முன்மொழியை வெளிப்படுத்தி, அதானி விவகாரத்தை மறக்க செய்துள்ளது பா.ஜ.க.

இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்த போது, “பா.ஜ.க.வினர் புதிய திசை திருப்பல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அதானி என்பதால் அவரை காப்பாற்ற, அவர் மீதான குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்க அம்பேத்கர் பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி நாட்டையே அவரது நண்பர் அதானிக்கு விற்பனை செய்து வருகிறார். எனவே, அதானியை சீண்டினால் பா.ஜ.க.வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: டெல்லியை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பட்டாசு வெடிக்கத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு !