Politics

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல் உரை! : முன்வைத்த கருத்து என்ன?

இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி சுமார் மூன்று வாரங்களாக நடந்து வருகிறது.

எனினும், நாடாளுமன்றத்தில் சரியான விவாதமோ அல்லது ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இடம்பெற்றுள்ளனவா? என்றால் இல்லை என்பதே விடையாக அமைந்துள்ளது.

காரணம், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிகராளிகள் விவாதம் வேண்டும் என முன்வைத்த மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல், ஃபெஞ்சல் புயல் நிவாரண ஒதுக்கீடு என எவற்றுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு இணைந்து போக விரும்பவில்லை.

இதனால், எதிர்க்கட்சிகளின் இடையூறு தான் காரணம் என குற்றச்சாட்டு வைத்து, நாடாளுமன்ற இரு அவைகளையும் முழுமையாக ஒத்திவைத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்நிலையில், இன்றைய (டிசம்பர் 13) நாடாளுமன்ற கூடலில் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75ஆவது ஆண்டு தொடங்கியதையொட்டி, அது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தனது முதல் நாடாளுமன்ற உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, “இன்றைய ஒன்றிய பா.ஜ.க அரசு, அதானி என்கிற ஒருவருக்காக அனைத்து நடைமுறையையும் மாற்றியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர். இந்திய இரயில்வே துறை, விமானத்துறை என அனைத்து துறைகளின் நிறுவனங்களும் அதானி வசமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக தனியார்மயமாக்கலை மையப்படுத்தி நகரும் ஒன்றிய அரசு, இடஒதுக்கீட்டை வலுவிழக்க செய்து வருகிறது. இதன் வழி, இந்திய அரசியலமைப்பின் உட்கூறுகளையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால், நாட்டை பாதுகாப்பதற்காக மக்கள் என்றும் அரசியலமைப்பை கைவிட மாட்டார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். அண்மை நடவடிக்கைகள் அதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

அரசியலமைப்பு என்பது இன்றியமையாதது. அதற்கு சிறந்த உதாரணமாக அண்மை நிகழ்வு ஒன்றை இங்கு பகிர்கிறேன். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் இருந்து சிலர் எங்களை காண வந்தனர். அதில் ஒரு சிறுவனும் வந்திருந்தார். அச்சிறுவனின் தந்தை, பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர். தான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற தந்தையின் கனவை நினைவாக்குவது தான், அவர் குறிக்கோளாக இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் இடத்தில் இந்திய அரசியலமைப்பு இருக்கிறது” என்றார்.

Also Read: மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள்: தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் !