Politics

பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் பொய் அறிக்கையை வெளியிடுகிறார்- அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம்!

சேலத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். குறிப்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பகுதியில் தண்ணீர் வழிந்து ஓடிய பகுதியை பார்வையிட்டார்.அமைச்சரின் ஆய்வைத் தொடர்ந்து உடனடியாக தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தியதை தொடர்ந்து தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மழை வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடனும் பேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். எனினும் எதிர்பார்த்ததை விட அதிக அளவு கனமழை கொட்டி தீர்த்ததால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.

ஏற்காட்டை பொறுத்தவரை, வரலாறு காணாத அளவில் 480 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் தண்ணீர் திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதியில் தண்ணீர் வழிந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகிறார். அவர் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் .

தேர்தல் நெருங்கி வருவதால் பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் அவர் , எங்கு செல்வது? என்ன சொல்வது என்ற தெரியாமல் பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதனை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.

Also Read: மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக வாய்ப்புகள் அமையும் - அமைச்சர் கோவி.செழியன் !