Politics

முதல் முறை எம்.பி... அரசியலமைப்பு புத்தகத்தோடு பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டின் 81 தொகுதிகளுக்கும் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களோடு சேர்த்து கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நான்தேட் மக்களவைத் தொகுதிகளுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர 46 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த நவ.23-ம் தேதி நடைபெற்ற நிலையில், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதே போல் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அதாவது வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இதில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்ச வாக்குகளில் வெற்றி பெற்றார். அதே போல் மகாராஷ்டிராவின் நான்டெட் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பளார் ரவீந்தர சவான் வசந்த்ராவ் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், இன்று பிரியங்கா காந்தி மற்றும் ரவீந்தர சவான் வசந்த்ராவ் ஆகிய இரண்டு பேரும் எம்.பி-க்களாக நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்கள் முன்பும் பதவியேற்றனர். அப்போது பிரியங்கா காந்தி அரசியலைப்பு புத்தகத்தை தனது கையில் ஏந்தியபடியே பதவியேற்றார்.

தொடர்ந்து ரவீந்தர சவானும் பதவியேற்றுக்கொண்டார். இரண்டு பெரும் முதல் முறையாக எம்.பி-க்களாக ஆகியிருக்கும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை! : ஒன்றிய இணை அமைச்சருக்கு தி.மு.க எம்.பி, பி.வில்சன் பதிலடி!