Politics
நிதி நிறுவன மோசடி : பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம், தொலைக்காட்சிக்கு சீல்!
மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிட்ட்' என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம் எனவும், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணம் கேட்டு முறையிட்டனர். ஆனால், உரிய பதில் கிடைக்காத நிலையில்,பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவிலும் முறையாக புகார் அளித்தனர்.
எனினும், நிதி நிறுவனம் சார்பில் இதுவரை முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 13 ம் தேதி திருச்சியில் தலைமறைவாக இருந்த பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையின் முடிவில் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் அவருக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சிக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து சென்றனர்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!