Politics
“எமெர்ஜென்சி காலத்தில் எங்களுக்கு மோடி, நட்டா எல்லாம் யார் என்றே தெரியாது” - லாலு பிரசாத் யாதவ் பளீச் !
தற்போது நடைபெற்று வரும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பல்வேறு சிக்கல்களும் இன்னல்களும் இருக்க, 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி (Emergency) குறித்து பேசி பாஜகவினர் திசைத்திருப்பி வருகின்றனர். எமெர்ஜென்சி அறிவித்து, இது 50-வது ஆண்டு என்று பாஜக கூறி வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இதுகுறித்து பேசப்பட்டது.
மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டரோ "1975-ல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி நாட்டின் இருண்ட காலம், அரசியலமைப்பின் மீதான தாக்குதல்" என்று நாடாளுமன்றத்திலேயே பேசினர். அந்த பேச்சு நாடாளுமன்றத்தில் தேவையில்லாத ஒன்று என்று அறிந்திருந்தும், காங்கிரஸை தாக்கும் வகையில் பாஜகவினர் பேசினர்.
பாஜகவினரின் இந்த திசைத்திருப்பல் அரசியலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் முடிந்து போன எமர்ஜென்சியைப் பற்றி பேசுவதில் பயனில்லை என்றும், தற்போதுள்ள உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு என்ன? என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதோடு தொடர்ந்து நடைபெற்று வரும் பாஜக ஆட்சியை விட எமெர்ஜென்சி காலத்தில் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், எமர்ஜென்சியின்போது தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், துன்புறுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து செல்ல ஜெயபிரகாஷ் நாராயண் அமைத்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். அதற்காக மிசா (MISA) சட்டத்தின்கீழ் 15 மாதங்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டேன்.
ஆனால் இன்று எமர்ஜென்சி பற்றி பேசும் பாஜகவின் தலைவர்கள், அமைச்சர்களில் பலரை பற்றி எனக்கும், என்னுடன் இருந்தவர்களுக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்?, மோடி, ஜெ.பி.நட்டா, பாஜகவின் ஒரு சில அமைச்சர்கள் என பலரை பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. ஆனால் இவர்கள் என்று நமக்கு சுதந்திரத்தின் மதிப்பைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
ஆம், இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் அடைத்தார். ஆனால், அவர் ஒருபோதும் எங்களைத் துன்புறுத்தவில்லை. அப்போது அவரோ, அவரது அமைச்சர்களோ யாரும் எங்களை 'தேச விரோதிகள்' என்றோ, 'தேசபக்தியற்றவர்கள்' என்றோ கூறவில்லை.
நமது அரசியலமைப்பின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுகளை அழிக்க நினைக்கும் வன்முறையாளர்களை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. 1975 என்பது, நமது ஜனநாயகத்தின் மீது ஒரு கறையாகத்தான் இருக்கிறது. ஆனால் 2024-ல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்துவிடக் கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!