Politics
“இனி ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு இல்லை...” - பாஜக கூட்டணியில் இருந்து விலகி நவீன் பட்நாயக் அதிரடி !
நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்த சூழலில் முன்பு பாஜக கூட்டணியில் இருந்த ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், இனி ஒருபோதும் பாஜகவுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. தொடர்ந்து அந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இந்த சூழலில் பாஜகவுக்கு தற்போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதை பிஜு ஜனதா தளம் அறிந்து, கூட்டணியில் இருந்து விலக முற்பட்டது.
குறிப்பாக அண்டை மாநிலமான மணிப்பூர் கலவரம் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை ஆகிய இரு தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணியை முறித்தது பிஜு ஜனதா தளம். இதனால் தேர்தலை தனித்து களம் கண்ட பாஜக, இந்த தேர்தலில் ஒடிசாவில் பெருமளவு வெற்றி பெற்றது.
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜகவும், 1 தொகுதியை காங்கிரஸும் பிடித்தது. இந்த முறை மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் வரலாறு காணாத அளவு படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பாஜக மீது தற்போது பிஜு ஜனதா தளம் கடும் அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில், இனி ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று அக்கட்சியின் 9 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் நவீன் பட்நாயக் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது ஒடிசா மாநிலத்துக்கு தேவையானவையை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்றால், தங்கள் குரல்களை ஓங்கி எழுப்ப வேண்டும் என்று நவீன் அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக மாநிலத்துக்கு தேவையானவை, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவை நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை தற்போது ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் தங்கள் போராட்டத்தை தொடங்குவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. முன்பு இருந்தது போல் இனி ஒருகாலமும் பாஜகவுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Also Read
-
ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
-
திருவண்ணாமலை மக்களின் நலனுக்காக... ரூ.2,095 கோடியில் திட்டப் பணிகள்... முதலமைச்சர் அசத்தல்!
-
“உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!