Politics
"இஸ்லாமிய இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்"- தெலுங்கு தேசம் கட்சி உறுதி... அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள் !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், அதே நேரம் மக்களவை தலைவர் மற்றும் முக்கிய இலாக்காக்களை இரு கட்சியும் கேட்பதால் பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆந்திராவில் இஸ்லாமிய இடஒதுக்கீடு குறித்து தெலுங்கு தேசம் மற்றும் பாஜக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று அக்கட்சி கூறியிருந்தது. ஆனால் பாஜக இஸ்லாமிய இடஒதுக்கீட்டை அகற்றுவோம் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், இஸ்லாமிய இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம் என தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ், "இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு இங்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதுவே எங்கள் எண்ணம். சமூகநீதிக்காக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது எங்கள் அரசின் பொறுப்பு.நாட்டை வளர்ந்த நாடாக முன்னேற்றவேண்டுமானால், ஒருவரையும் விட்டுவிடமுடியாது. ஒற்றுமையாக இருந்து அதைச் செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதே தெலுங்கு தேசம் கட்சியின் நோக்கம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!